Thursday, December 20, 2007

ரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி!

அரசியல் என்றால் என்னவென்று நேர்மறையில் விளக்குவதை விட எதிலெல்லாம் அரசியல் ஒளிந்து கொண்டு என்னவாக இருக்கிறது என்று விளக்குவது சிரமமானது. அதுவே ஒரு சினிமா எனும் போது காட்சிக் கலையின் உணர்ச்சி வெள்ளத்தில் பார்வையாளர்கள் கட்டுண்டே இருக்க முடியும் என்பதால் கூரிய விமரிசனப் பார்வையை ஏற்படுத்தும் முயற்சி இன்னும் கடினமாக மாறிவிடுகிறது.


சினிமா ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி பொழுதைப் போக்குவது என்றால் என்பதன் பொருளே அது சினிமாதான் என்று மாறியிருக்கும்போது ஒரு திரைப்படத்தைக் கருத்தியல் தளத்தில் நின்று பார்ப்பது, சிந்திப்பது, விவாதிப்பதினூடாகத்தான் காட்சிக் கலையின் உணர்ச்சிக் கவர்ச்சியிலிருந்து நம் சொந்த விழிப்புணர்வு வழியாக விடுதலை பெற முடியும். இல்லையென்றால் அந்த அபினின் போதையில் நம்மிடம் கருக்கொண்டிருக்கும் முற்போக்கான அரசியல் பாதை நம்மையறியாமலே குழப்பமடையக் கூடும். அப்படித்தான் சாதாரண மக்களிடம் பல்வேறு ஆளும் வர்க்க அரசியல் கருத்துக்கள் குடியேறுகின்றன. இந்தக் குடியேற்றத்துக்கு இந்தி பேசும் மாநிலங்களில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரங் தே பஸந்தி இந்தித் திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு.


தற்போதைய சினிமா ஃபார்முலாவின் படி விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்ட இந்தப் படத்தைப் பார்க்க இயலாத வாசகர்களுக்காக கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.லண்டனில் இருக்கும் ஓர் ஆங்கிலேயப் பெண் இந்தியாவில் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய புரட்சிகர வீரர்களான சந்திரசேகர ஆசாத், பகத்சிங், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் முதலானவர்களின் வரலாற்றில் ஆர்வம் கொள்கிறாள். அவர்களைப் பற்றி அவள் எடுக்க விரும்பும் ஆவணப்படம் மிகுந்த செலவு பிடிக்கும் என்பதால் அவள் வேலை பார்க்கும் என்.ஆர்.ஐ. இந்தியர்களை இயக்குநர்களாகக் கொண்ட நிறுவனம் மறுத்து விடுகிறது. இதனால் தன் சொந்த முயற்சியில் படமெடுப்பதற்கு இந்தியா கிளம்புகிறாள்.


புதுதில்லியில் இறங்குபவளை வரவேற்கும் ஒரு இந்தியத் தோழியின் உதவியோடு தன் ஆவணப்படத்தில் நடிக்க வைப்பதற்கு பல கல்லூரி மாணவர்களைச் சந்திக்கிறாள். ஆசாத், பகத்சிங் உரையாடல்களைப் பேசத் திணறும் அந்த நவநாகரீக இளைஞர்களைக் கண்டு சலிப்புக் கொள்கிறாள். சலித்தவளை ஜாலியாக மாற்றுவதற்கு அந்த இந்தியத் தோழி தன்னுடைய நண்பர் வட்டத்தை அறிமுகம் செய்கிறாள்.


ஆமிர்கானின் அந்த நண்பர் வட்டம் வண்ணமயமானது. இந்து, முசுலீம், சீக்கியர், ஓவியர், அதிவேகமாக பைக் ஓட்டுபவர்கள், பீரைக் குடித்தவாறே பனைமர உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிப்பவர்கள், இப்படிப் பல அடையாளங்களோடு ஆட்டமும், பாட்டமுமாய் நாளைக் கழிப்பவர்கள். தோழியின் காதலனான மாதவன் இந்திய விமானப்படையில் பைலட்டாகப் பணியாற்றுபவர். அவரும் இந்தக் கும்மாளத்தில் அவ்வப்போது பங்கு பெறுபவர்.


இந்த நண்பர் வட்டத்தின் இளமைத் துடிப்பில் மனதைப் பறி கொடுத்த அந்த வெள்ளைக்காரப் பெண்மணி இவர்கள்தான் தன் படத்தில் நடிப்பதற்குப் பொருத்தமானவர்கள் என்று முடிவு செய்கிறாள். இந்த நண்பர் வட்டத்திற்கு பாரதப் பண்பாடு குறித்து உபதேசம் செய்து சண்டையிடும் அதுல் குல்கர்னி ஒரு தீவிரமான பாரதீய ஜனதா தொண்டர். அவரையும் தன் படத்தில் நடிக்க வைப்பதற்குத் தேர்வு செய்கிறாள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நண்பர் வட்டத்தினர் பின்னர் ஏற்றுக் கொள்கிறார்கள்.


ஆரம்பத்தில் இந்த ஆவணப்படத்தை தமாசாகக் கருதும் நண்பர்கள் அந்த வெள்ளையினப் பெண்ணின் தீவிரமான அக்கறையை உணர்ந்து வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். நவ ஜவான் பாரத் சபாவின் உறுப்பினர்கள் நெருப்பின் மேல் உறுதிமொழியெடுப்பது, காகோரி ரயில் கொள்ளை, லாலாலஜபதிராய் மீதான தடியடி, அதற்குப் பதிலடியாக ஆங்கிலப் போலீசு அதிகாரியான ஸாண்டர்சைக் கொலை செய்வது, பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசுவது எல்லாம் படமாக்கப்படுகின்றன.
இறுதியில் போராளிகள் தூக்கிலிடப்படும் காட்சிகளைத் திரையில் பார்க்கும் நண்பர்கள் சில கணங்கள் உறைந்து போகிறார்கள். ஒரு மேட்டுக்குடி மது பாரில் அமர்ந்த படி, சீரழிந்து வரும் இன்றைய இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்து விவாதிக்கிறார்கள். பைலட் மாதவன், படித்தவர்கள் இராணுவத்துக்கும், ஐ.ஏ.எஸ்ஸுக்கும், அரசியலுக்கும் வரவேண்டும் என்கிறார். படவேலைகளுக்கு இடையே ஆட்டமும், பாட்டமுமான அவர்களது கொண்டாட்ட வாழ்க்கையும் தொடருகின்றது.


ஆனால் மிக்21 விமானத்தில் பறந்த மாதவன் விபத்தில் இறந்து போக நண்பர்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. விமானப்படையில் பல ஆண்டுகளாகப் பணியிலிருக்கும் ரசியாவின் மிக்21 விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது குறித்துப் புலனாய்வு செய்த என்.டி.டி.வி தொலைக்காட்சி, தரங்குறைந்த மிக் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் இருப்பதாக அறிவிக்கிறது. ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. அமைச்சரவையில் ஊழல் செய்த அந்த மந்திரி விமானம் வாங்கியதில் ஊழல் ஒன்றுமில்லையெனவும், விமானம் விபத்திற்குள்ளானதற்கு பைலட்டின் தவறே காரணம் என்றும் அலட்சியமாகக் கூறுகிறார்.


அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மாணவர்களைத் திரட்டி இந்தியா கேட் எதிரே (குடியரசுத் தின ஊர்வலம் நடக்கும் இடம்) மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியாக ஊர்வலம் நடத்தி தங்களது எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். எரிச்சலடையும் மந்திரி போலீசை விட்டுக் கொடூரமாகத் தடியடித் தாக்குதலை நடத்துகிறார். பலருக்கு மண்டை உடைகிறது. மாதவனின் வயதான அம்மா கோமா நிலைக்குப் போகிறார். இந்தக் காட்சி லஜபதிராயின் தடியடிக்காட்சிகளுடன் மாற்றி மாற்றிக் காண்பிக்கப்படுகிறது.
ஆத்திரமடைந்த நண்பர்கள் முதன்முதலாக அரட்டைக்குப் பதிலாகக் கோபத்துடன் கூடி விவாதிக்கிறார்கள். தாங்கள் ஏற்று நடித்த புரட்சியாளர்களின் வசனங்களை இப்போது நிஜத்தில் பேசுகிறார்கள். இங்கும் ஆசாத்தும், பகத்சிங்கும், பிஸ்மில்லும் மாறி மாறி வந்து பேசுகிறார்கள். எது நிழல் எது நிஜம் என்ற பேதம் தெரியாதபடி விவாதம் நடைபெறுகிறது. இறுதியில் மந்திரியைக் கொல்வது என்று முடிவெடுக்கிறார்கள்.


ஆவணப்படத்தில் இடம் பெறும் சான்டர்ஸ் கொலைக்காட்சியைப் போலவே அதே சூழலில், அதே உத்தியோடு மந்திரி கொலை செய்யப்படுகிறார். தொலைக்காட்சியில் பரபரப்புச் செய்தியாக இடம் பெறும் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் யார் என்று தெரியாத சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ. சதியாக இருக்குமோ என்று அரசியல் உலகில் பேசப்படுகிறது. தங்களது கொலைக்கான நியாயம் இதன் மூலம் மறைக்கப்படுவது கண்டு குமுறும் நண்பர்கள் அதை உலகிற்குச் சொல்லுவதென முடிவெடுக்கிறார்கள். ஒருநாள் அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவைக் கைப்பற்றி நேரடி ஒலிபரப்பில் தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கிறார்கள். தொலைபேசியில் வாழ்த்துக்களுடன் வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்தச் சம்பவம் தலைப்புச் செய்தியாகக் காட்டப்படுகிறது.
இவர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதும் அரசு அதிரடிப்படையை வானொலி நிலையத்திற்கு அனுப்புகிறது. நண்பர்கள் அனைவரும் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆவணப்படத்தில் தாங்கள் தூக்கிலிடப்படும் காட்சிகளை நினைத்தவாறே சிரித்துக்கொண்டே சாகிறார்கள். என்.டி.டி.வியின் காமராக்கள் வழியாக இந்தியா முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதோடு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடு பேசுகிறார்கள். திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகர்கள், வரலாற்றிலிருந்து பகத்சிங்கும், ஆசாத்தும் தங்களுக்குப் பிடித்த விதத்தில் உயிர்த்தெழுந்து வருவதை கைதட்டியவாறே எண்ணி மகிழ்ந்தவாறு மனதில் பாரத்துடன் வெளியேறுகிறார்கள்.
நகர்ப்புற அதிலும் மாநகரப் பார்வையாளர்களைக் குறிவைத்து சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் 600 பிரதிகள் எடுக்கப்பட்டு உலகெங்கும் வெளியிடப்பட்டு முதல் வாரத்திலேயே தயாரிப்புச் செலவை வசூலித்து விட்டதாம். இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன? மாறுபட்ட திரைக்கதை என்பதாலும் இருக்கலாம். அந்த மாறுபாடு என்ன, பார்வையாளர்கள் எதில் ஒன்றினார்கள், இப்படத்தின் உணர்ச்சி தோற்றுவிக்கும் அரசியல் என்ன என்பதைப் பரிசீலிப்பதற்கு முன் சில கொசுறு விசயங்களைப் பார்த்து விடலாம்.
அந்த வெள்ளைக்காரப் பெண் தன் சமகால அரசியல் உணர்வுக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆவணப்படம் எடுக்க அமெரிக்காவும், பிரிட்டனும் ஆக்கிரமித்திருக்கும் இராக்கிற்குத்தான் சென்றிருக்க வேண்டும். சரி போகட்டும், இந்தியாவிற்கு வந்தவள் அந்த நண்பர் வட்டத்துடன் ஆடிப் பாடிப் பழகுபவள் மறந்தும் கூட இராக் மீதான ஆக்கிரமிப்பு குறித்துப் பேசவில்லை.
இதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். இருக்கிறது. படத்திற்கு ஸ்பான்சரே கொக்கோ கோலாதான். படத்தில் நண்பர்கள் சாப்பிட்டவாறே அரட்டையடிக்கும் பஞ்சாப் தாபா காட்சிகள் முழுக்க கோக் விளம்பரங்கள்தான். நடிகர் ஆமிர்கானும் கோக்கின் முக்கியமான விளம்பர நட்சத்திரமாவார். படம் வெளிவந்த தினங்களில் கோக் தனது பாட்டில்களில் ரங் தே பஸந்தி ஸ்டிக்கர் ஒட்டியே விநியோகித்திருக்கிறது. பிளாச்சிமடாவிலும், கங்கைகொண்டானிலும் போராடும் மக்களை ஒடுக்க தனி சாம்ராச்சியமே நடத்திவரும் கோக் இங்கே ஹீரோக்களின் மனம் கவர்ந்த பானமாக இருக்கிறது. 21ஆம் நூற்றாண்டின் இந்திய தேசபக்தியில் கோக்கும் ஒரு அங்கம் என்பது உலகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் ஒரு கள்ள உறவு போலும்.
அடுத்து மிக்21 விமானம் எனும் ரசியவிமானம் வாங்கியதில் ஊழல் என்று வருகிறது. இதுவே எப்16 எனும் தரங்குறைந்த அமெரிக்க விமானம் வாங்கியதில் ஊழல் என்று எடுத்திருக்க முடியுமா? அல்லது உண்மையான இராணுவ ஊழல்களான போஃபர்ஸ் பீரங்கி, கார்கில் சவப்பெட்டி ஊழல், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் போன்றவற்றை வைத்து எடுத்திருக்க முடியுமா?
அப்படி எடுத்திருந்தால் அமெரிக்க அடிமைத்தனத்திலும், இந்த ஊழல்களிலும் ஊறித்திளைத்திருக்கும் தற்போதைய காங்கிரசு அரசு, ஆர்.கே.செல்வமணியின் குற்றப்பத்திரிகையை நல்லடக்கம் செய்தது போல இந்தப்படத்தைப் புதைத்திருக்கும். எனவே, ஊழல் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் ஆளுபவர்களின் மனம் நோகாமல் பேசவேண்டும் என்ற விதியை படம் செவ்வனே பின்பற்றியிருக்கிறது.


மகிழ்ச்சியாக வாழும் அந்த நண்பர் வட்டத்தில் சோகத்தைக் கொண்டு வரும் ஒரு ஊழல் மந்திரியை எப்படிப் போட்டுத் தள்ளுவது என்பதை வித்தியாசமாகச் சொல்லவேண்டும் என்று யோசித்திருக்கும் இந்தப் படத்தின் படைப்பாளிகள் அதற்காக மட்டுமே பகத்சிங், ஆசாத் வரலாற்றை வம்படியாய் இழுத்து வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே பகத்சிங்கிற்கு பொட்டு வைத்தும், ஆசாத்துக்குப் பூணூல் போட்டும் இந்து மதவெறியர்கள் செய்யும் அநீதி ஒருபுறம். மறுபுறம் பாராளுமன்றப் பூசை செய்யும் போலி கம்யூனிஸ்ட்டுகள் தங்களால் கனவிலும் செய்யமுடியாத சாகசங்களைச் செய்திருக்கும் பகத்சிங்கை ஆக்ஷன் ஹீரோவாக அணிகளுக்குச் சித்தரிக்கும் அயோக்கியத்தனம். இப்போது இந்தப் படமும் தனது பங்குக்கு பகத்சிங்கை இம்சை செய்கிறது.


ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய மக்களின் வீரமிக்க போராட்டங்களை பலமுறை காட்டிக் கொடுத்தும் கருவறுத்தும் வந்தது காந்தி காங்கிரசு துரோகக் கும்பல். இந்தத் துரோக வரலாற்றுக்கெதிரான குறியீடுதான் பகத்சிங். தனது சிறைக்குறிப்புக்களில் இந்தியாவில் மலர வேண்டிய சோசலிச ஆட்சி குறித்தும், அதற்கு மக்களை அணிதிரட்டிச் செய்யவேண்டிய புரட்சிப் பணி குறித்தும், பரிசீலனை செய்து கனவு காணும் இந்த வரலாற்று நாயகனை பொய்யான சித்தரிப்புக்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. இந்தப் படத்தில் கேளிக்கைகள் செய்வதிலும், மந்திரியைக் கொல்வதிலும் ஈடுபடும் மேட்டுக்குடி இளைஞர்களின் சாகச உணர்வை ஒளிவட்டம் போட்டுக் காண்பிப்பதற்காக பகத்சிங்கும் ஏனைய போராளிகளும் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.


ஆவணப்படம் எடுக்க வந்த அந்தப் பெண் நல்ல நடிகர்கள் வேண்டுமென்றால் புதுதில்லி தேசிய நாடகப் பயிற்சிப் பள்ளிக்குச் சென்றிருந்தால் விசயம் முடிந்திருக்கும். ஆனால் அதில் கதை இருந்திருக்காது. ரசிகர்களும் படத்தில் ஒன்றியிருக்க முடியாது.


பீர் கோக்கைக் குடித்துக் கொண்டு அந்தரத்தில் சாகசம் செய்யும் இந்த இளைஞர்கள், கும்மிருட்டிலும் ஜீப்பையும் பைக்கையும் அதிவேகமாய் ஓட்டும் இந்த இளைஞர்கள், எப்போதும் ஆட்டமும் பாட்டமும் அரட்டையுமாய் இருக்கும் இந்த இளைஞர்கள், ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் நேசிக்கும் இந்த இளைஞர்களின் கூட்டத்தை படம் ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே ரசிகர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்; அங்கீகரிக்கின்றனர்; அந்தக் குழுவில் சேர விரும்புகின்றனர்; அல்லது சேர்ந்து விட்டனர். இத்தகைய துடிப்பான இளைஞர் குழாமில்தான் பார்வையாளர்கள் தங்களைக் காண்கின்றனரே ஒழிய பகத்சிங் முதலான போராளிகளில் அல்ல. இந்த நண்பர் வட்டத்திற்குள் ஆவணப்படத்தின் மூலம் வந்து போவதால்தான் அந்தப் புரட்சி வீரர்களுக்குரிய சிறப்பை ரசிகர்கள் அளிக்கின்றனர்.


தகவல் புரட்சி நடைபெறும் மாநகரங்களில் ஐந்து இலக்கச் சம்பளம் வாங்கும் மேட்டுக்குடி நடுத்தரவர்க்கம் சனி, ஞாயிறு வார விடுமுறைகளில் இப்படித்தான் வாழ்கிறது அல்லது வாழ விரும்புகிறது. சுற்றிலும் சுயநலம் சூழ வாழ்ந்து கொண்டே இன்னும் மேலே செல்வதையே இலட்சியமாகக் கொண்டு நகரும் நிஜ வாழ்க்கையானது திரையில் தன்னை இவ்வாறு அறிந்துணர்வதில் வியப்பில்லை. இந்த வாழ்க்கையைத்தான் சமூகப் பொறுப்புள்ள வாழ்க்கையாக அந்த வர்க்கம் கருதிக் கொள்கிறது.


சுதந்திரப் போராட்ட வீரர்களின் உரைகளைப் பேசி நடிக்கும் அந்த இளைஞர்கள் ஊரைச் சுற்றியவாறு கேலி பேசித் திரியும் தங்களது அற்பவாழ்க்கை குறித்து எள்ளளவேனும் குற்ற உணர்வு அடைவதில்லை. மாறாக, தாங்கள் ஏற்கெனவே நல்லவர்கள் எனவும் தங்களைப் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பது மட்டும் நல்லதல்ல என்று அதையும் மேலோட்டமாக பாரில் அமர்ந்து கொண்டு மது அருந்தியவாறு பேசிக் கொள்கிறார்கள். கோப்பையில் இருக்கும் மது தீர்வதற்குள் மாதவன் இறந்துவிட உடனே மந்திரியைக் கொன்று தியாகியாகிறார்கள்.


அந்த மந்திரிகூட மக்களிடம் செல்வாக்குப் பெற்று அரசியலில் பல படிகளைத் தாண்டி மந்திரியாகி அப்புறம்தான் ஊழல் செய்ய முடியும். ஆனால் இந்த மேட்டுக்குடி இளைஞர்களுக்கு இந்தப் படிநிலைகள் ஏதும் இல்லை. ஒரே அடியில் தலைவர்களாகி விடுகிறார்கள். இந்தப் படத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அரசியல் இதுதான். எள்ளளவும் சமூகப் பொறுப்பற்று வாழும் மேட்டுக்குடி வர்க்கம் சமூகத்துக்குப் பொறுப்பான அரியணையில் தன்னை அமரவைத்து முடிசூட்டாததினால்தான் சமூகம் சீரழிவதாகக் கருதிக் கொள்கிறது.


இந்தக் கருத்துக்களை முதல்வன், அந்நியன் படங்கள் முதல் ஹிந்துப் பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதும் ஓய்வு பெற்ற பார்ப்பன மேல்சாதி அரசு அதிகாரிகள் வரை எங்கும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். படங்களில் கூட நாயகன் வில்லனை அழிப்பதற்கு பல்வேறு காரணங்கள், நியாயங்கள், சம்பவங்கள் சொல்லப்பட்டு கடைசியில்தான் அநீதி ஒழிந்து நீதி வெற்றி பெறும். மேட்டுக்குடி வர்க்கத்திற்கு அந்தப் பொறுமை இருப்பதில்லை. அதனால்தான் அதற்கு ஜனநாயகம் பிடிப்பதில்லை. பாசிசமும், சர்வாதிகாரமும் மேட்டுக்குடி வர்க்கத்திற்குப் பொருந்திவருகிற அரசியல் கோட்பாடுகள். எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் அருண்ஷோரி முதல் துக்ளக் சோ வரை பல அறிவாளிகளைக் கூறலாம். படத்தில் தங்கள் வட்டத்தின் மகிழ்ச்சி குலைந்துபோன ஒரே காரணத்திற்காக மட்டும் உடனே துப்பாக்கி தூக்குகிறார்கள். இல்லையேல் அந்தக் கைகளில் பீர் பாட்டில் மட்டும் இருந்திருக்கும்.


தற்போது தேசியப் பத்திரிக்கைகளில் அடிபடும் ஜெசிகாலால் விவகாரத்தைப் பாருங்கள். மனுசர்மா ஹரியானா காங்கிரசு மந்திரியின் மகன், விகாஷ் யாதவ் உ.பி. தாதா டி.பி. யாதவின் மகன், அமர்தீப் சிங், அலோக் கன்னா இருவரும் கோகோ கோலாவில் மானேஜர்கள்; இந்த நண்பர் வட்டம் 1999இல் ஒரு நள்ளிரவில் மதுவருந்த டாமரின்ட் கோர்ட் எனும் பாருக்கு செல்கிறார்கள். மது பரிமாறும் ஜெசிகா லால் நேரமாகிவிட்டது என்று மறுக்கிறாள். வார்த்தைகள் தடிக்கின்றன. உடனே மனுசர்மா தனது ரிவால்வரால் ஜெசிகாவைச் சுட்டுக் கொல்கிறான்.


சுமார் 100 பேர் முன்னிலையில் நடந்த இந்தப் படுகொலைக்கான வழக்கு ஆறு ஆண்டுகளாய் நடந்து தற்போது குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நண்பர் வட்டத்திற்கும் படத்தில் வரும் அமீர்கானின் நண்பர் வட்டத்திற்கும் என்ன வேறுபாடு? ஒருவேளை இவர்கள் அந்த பாருக்குச் சென்று மது மறுக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? துப்பாக்கி இல்லாமல் போயிருந்தால் வெறும் கைகலப்பில் முடிந்திருக்கும். மனுசர்மாவைக் காப்பாற்ற பெரும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் மட்டுமின்றி சம்பவத்தின் போது உடன் சென்ற நண்பர்களும் பெரும் பிரயத்தனம் செய்திருக்கிறார்கள். இங்கும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கத்தானே செய்கிறார்கள். இந்த நட்புவட்டங்களின் மகிழ்ச்சிகளில் ஒன்றில் மந்திரி குறுக்கிடுகிறான், மற்றொன்றில் மது பரிமாறும் பெண் குறுக்கிடுகிறாள், அவ்வளவுதான் வேறுபாடு.


படத்தில் புரட்சிகரமான டி.வி.யாக வரும் பிரணாய் ராயின் என்.டி.டி.வி. நிஜத்திலும் அப்படிக் காட்டிக் கொள்ள முயலுகிறது. ஜெசிகாவுக்கு ஆதரவாக பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி இந்தியா கேட்டில் அமைதியாக எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். 2 இலட்சம் பேர் என்.டி.டி.விக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்களாம். அதை எடுத்துக் கொண்டு பிரணாய் ராய் அப்துல் கலாமைப் பார்த்து நீதி வேண்டுமென கோரிக்கை வைத்தாராம். இதை அந்த டி.வி. ஏதோ மாபெரும் புரட்சி நடவடிக்கையாக சித்தரித்து நேரடியாக ஒளிபரப்புகிறது.
இதே பிரணாய் ராய் லாவோசில் நடந்த பொருளாதார மாநாட்டில் அனில் அம்பானி உள்ளிட்ட முதலாளிகளோடு ""உலக முதலாளிகளே இந்தியாவிற்குள் முதலீடு செய்ய வாருங்கள்'' என்று டான்ஸ் ஆடியவர். பில் கேட்ஸ் இந்தியாவிற்கு வந்த போது பரம்பொருளைக் கண்ட பரவசத்துடன் பேட்டி எடுத்தவர். புஷ்ஷûக்கு மன்மோகன் சிங் விருந்து அளித்தபோது கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றவர். இப்படிப் பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிமையாக இருக்கும் ஒரு ஜந்து தன்னை ஒரு போராளியாகக் காட்டிக் கொள்வதை என்னவென்று அழைப்பது?


ஜெசிகாவிற்கு நீதி கிடைக்கவில்லை என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பேசுவதிலும் ஒரு நடுத்தர வர்க்க அரசியல் இருக்கிறது. ஜெசிகா லால் ஒரு பெண், அதிலும் ஒரு விளம்பர மாடல். இந்தப் பெண் கொலை செய்யப்பட்ட சோகத்தை மாநகரத்து நடுத்தர வர்க்கத்தின் சோகமாக மாற்றுவதில் ஊடக முதலாளிகளுக்குப் பெரிய பலன் இருக்கிறது. ஜெசிகாவிற்குப் பதில் மதுக்கோப்பை கழுவும் ஒரு பையன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது இந்த அளவுக்குப் பேசப்பட்டிருக்காது.


இந்தப் பத்தாண்டுகளில் பம்பாய்க் கலவரம், குஜராத் கலவரம், மேலவளவுப் படுகொலை, ரன்பீர்சேனா அட்டூழியங்கள் என்று நீதி கிடைக்காத சம்பவங்கள் எத்தனை இருக்கின்றன? அதற்கெல்லாம் என்.டி.டி.வி இயக்கம் எடுக்கவில்லை. குடியரசுத் தலைவரைப் பார்க்கவில்லை. படத்திற்கு கோக் போல ஸ்பான்சர் செய்திருக்கும் அந்த டிவி., திரையில் வரும் காட்சிகளைப் போல நிஜத்தில் காட்டிக் கொள்வதற்கு ஜெசிகாவின் வழக்கு அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. கூடவே இரண்டு இலட்சம் எஸ்.எம்.எஸ். செய்திகள் அனுப்பிய அந்த நடுத்தர வர்க்கமும் தன்னை மாபெரும் சமூகப் போராளியாகக் கருதிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்தக் கோழைகள் எவரும் குறைந்தபட்சம் மனுசர்மாவைத் தூக்கில் போடவேண்டும் என்று கூடக் கேட்கவில்லை.


ஜெசிகா லாலுக்கு நீதி வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களது கோரிக்கை. பொல்லாத நீதி! ஆக இந்தப் படம் ஏன் வெற்றி பெற்றது, பார்வையாளர்கள் எதில் ஒன்றினார்கள் என்பதை ஜெசிகாவின் வழக்கு என்ற உண்மை எடுப்பாக விளக்கி விடுவதால், நாம் தனியாக விளக்குவதற்கு ஒன்றுமில்லை.


மு இளநம்பி
புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2006