Wednesday, December 19, 2007

"அழகி" அற்ப மனிதனின் அவலம் !

"சண்முகம் ஒன்றும் புரட்சிக்காரனல்ல; உங்களையும் என்னையும் போன்று குறைகளும் பலவீனங்களும் கொண்ட ஒரு நல்ல மனிதன் - அவ்வளவுதான்" என்று ரசிக சண்முகங்கள் வாதிடலாம். "சண்முகம் ஏன் சராசரி மனிதனாகச் சித்தரிக்கப்பட்டுயிருக்கின்றான்" என்பதல்ல நம் கேள்வி. "இந்த சராசரி மனிதனின் அற்பத்தனங்கள் இடிந்துரைக்கப் படாமல் அனுதாபத்துடன் சித்தரிக்கப்படுவது ஏன்" என்பதுதான் கேள்வி.
..
அந்தக் கலக்கமும் , வேதனையும் ஒரு மனிதனின் தவறுகளையும், தடுமாற்றங்களையும் அவனையே உணரச் செய்து, இதயத்தைத் தூய்மைப்படுத்தும் துன்பல்ல. மாறாக அந்தத் தவறுகளையே தான் செய்த தியாகமாகக் கருதுவது, அவனது இதயத்தை மேலும் கறைப்படுத்திக் காரியவாத வாழ்க்கையில் பீடு நடை போட வைப்பதெல்லாம் எப்படி நியாயமாகும்? இது ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கின்ற போராட்டத்தில் சுயநலனையே முன்னிறுத்துகிறது. இத்தகைய மனிதர்கள் தான் லஞ்சம் வாங்குவதும், லஞ்சம் கொடுத்து மெடிக்கல் சீட் பெறுவது, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாற்றுவது, தெருப்பிரச்சினைக்கே வீட்டுக்கதவை சாத்துவது முதலான காரியங்களைக் குற்ற உணர்வின்றி நியாய உணர்வோடு செய்பவர்கள்.
..
எனவே சண்முகமும், அவனது கையறு நிலையின் அவ்லத்தை இதயத்தில் சுமந்த சண்முகங்களாகிய நாமும், இன்னமும் அப்பாவிகள் என்று கருதிக் கொண்டுருந்தால் குற்றவாளிகள் என்ற பட்டியலில் ஏதோ ஒரு முகாந்திரத்தில் சேருவதற்குக் காத்திருப்போம். "நாம் அப்பாவிகளல்ல, கடைந்தெடுத்த காரியவாதிகள்" என்று சுய விமர்சனம் செய்துக் கொள்ளும் நேர்மையிருந்தால் எந்தக் குற்றவாளிப் பட்டியலிலும் சேராமல் போராடுவோம்; வாசகர்கள் பரிசீலிக்கட்டும்.