Tuesday, December 25, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு - திரைப்பட விமர்சனம்

ஆதிக்க சாதிவெறி மறைத்த யதார்த்தம் !

மக்களின் யாதார்த்த வாழ்க்கையினை சொல்வதும், சமூக ரீதியில் அவர்களை சிந்திக்க தூண்டுவதும், பிற்போக்கு அடிமைத்தனங்களில் இருந்து விடுவிக்கும் வகையிலும், போராட்டத்தின் அவசியத்தை உணரும் வகையிலும் இருப்பதும் - இருக்கவேண்டியதும் தான் கலை இலக்கியம். "கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே" என்பதன் அர்த்தம் இதுதான்.
..
இன்று யதார்த்தம் என்ற பேரில் இல்லாததையும் - திரித்தும், சமூக பிரச்சினைகளை தனிப்பட்ட ரீதியிலானது என்று திசை திருப்பியும், அடிமைத்தனங்களை மெஞ்சியும், போராட்டம் என போலிஎதிர்ப்பையும் கொண்ட கலைஞர்களை அன்றாடம் பார்ப்பனியமும், மறுகாலனியாதிக்கமும் உற்பத்தி செய்து வருகிறது.
..
அதில் திரைப்பட துறை உற்பத்தியில் தற்போது முன்னணியில் இருப்பவர்கள் தங்கர்பச்சன், சேரன், சீமான் போன்றவர்கள். அவர்களில் தங்கர்பச்சான் உடைய 'ஒன்பது ரூபாய் நோட்டு' என்ற 'திரைப்பட'த்தை பற்றிய பார்வையே இந்த பதிவு.
..
படம் வெளிவருவதற்கு முன்னர் இசை வெளியீட்டு விழா என்ற பேரில் நிறைய கலைஞர்கள் (?) பங்கேற்று ஒருவரை ஒருவர் சொறிந்து மன்னிக்கவும் புகழ்ந்து கொண்டார்கள். அப்ப படத்தை பற்றி கூறிய வார்த்தைகள் படையாச்சி (சத்யராஜ்) அரிக்கன் லைட்டை துடைக்கும் அழகு, ஊருல எல்லோரும் தூங்கியிருப்பாங்கல ( வாழ்ந்து கெட்டவராக வரும் சத்யராஜ் சொந்த ஊருக்கு இரவில் போகும் போது கேட்கும் கேள்வி) என்று சில வசனங்களை கூறி தங்கர் புகழை பாடினர்.
..
இப்படி லைட்ட துடைப்பதில் என்னடா அழகு, இரவு-ல் தானடா மனிதன் தூங்குவான் என்ற கேள்வி யாருக்கும் கோபமாக கேட்க தூண்டும். சரி படம் வெளிவந்துவிட்டது, பார்த்துவிட்டும் வந்தாச்சு. என்ன சொல்லியிருக்கார் தங்கர்பச்சான் என்று பார்ப்போம்.
..
"சத்யராஜ் பஸ்-க்கு போதுமான காசு இல்லாமல் கண்டக்டரிடம் தன்னை பத்திரக்கோட்டை ஊருக்கு அழைத்து செல்லும்மாறு கெஞ்சி கேட்டும் அவர் மறுத்துக்கொண்டும் இருக்க பஸ்-ல் இருக்கும் சத்யராஜ் ஊரை சேர்ந்த ஒரு இளைஞன் சத்யராஜ்-க்கு டிக்கெட் போட்டு உடன் அழைத்து வருகிறார்...படம் ஆரம்பம் இதுதான். இந்த பயணத்தில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையினை மாதவ படையாச்சி (சத்யராஜ்) நினைத்துப்பார்க்கிறார்.

ஊரூல விவசாயம் செழிப்பாக செய்து, வசதி வாய்ப்பாக வாழ்கிறார் மாதவ படையாச்சி . தன் ரெண்டு பெண்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டு, தன் மூன்று மகன்களில் இரண்டு பேருக்கு திருமணம் செய்து மருமகள்கள், பேரன் பேத்தி என கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார். வர்ற வருமானத்தில் ஊரில கஷ்டப்படுபவர்கள், தன் நண்பர் ஹாஜா பாய் (நாசர்)க்கும் என நிறைய உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் திருமணம் ஆகாமல் இருக்கும் மகன் அந்த ஊர் வண்ணார் வீட்டு பெண்னை காதலித்து அந்த பெண்னும் கர்ப்பம் தரித்து விடுகிறாள். இந்த விஷயம் மாதவ படையாச்சியின் மனைவிக்கு (அர்ச்சணா) தெரிய வருகிறது. படையாச்சி மனைவி இந்த திருமணம் மட்டும் நடந்தது என்றால் நம் சாதி சனம் எல்லாம் காரிதுப்பும் அதனால் கூடாது என மகனை அடிக்கிறாள், மகன் கண்டிப்பாக அந்த பெண்ணை தான் கட்டுவேன் என சொல்கிறான். இதை தூரத்தில் இருந்து கேட்டுவிடுறார் படையாச்சி.
..
அப்ப இருந்து துக்கமாக இருவரும் இருக்க (அவர்களுக்குள்ளும் இது பற்றி பேசவில்லை) அன்று இரவு தன் சொந்தக்காரன் தூண்டுதல் பேரில் மற்ற இரண்டு மகன்கள் பணம் வேணும், நாங்களும் எங்க பெண்டாட்டிகளும் டூர் போக போறோம் என்கின்றனர். அறுவடை வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு போகவேண்டியது தானே என மாதவ படையாச்சி கேட்க அவர்கள் மறுத்துவிட்டு வாக்குவாதம் ஆகிறது. நாங்க (மாதவ படையாச்சி) ஏற்கனவே நொந்துபோய் இருக்கோம் எங்களை ஏண்டா இப்படி பேசுற என வருந்துகிறார்.
..
இதற்கிடையில் மருமகள்கள் இருவரும் வந்து நீயே வேலை செய்யலாமே என கேட்க, படையாச்சி மனைவி எழுந்து வந்து, எப்படி மாதவ படையாச்சியை நீ கேள்வி கேட்கலாம், அவரு சாமிடி என பேச ஆரம்பிக்கிறாள். பின் மகன்கள் மாதவ படையாச்சியிடம் 'நீ போனாதான் எங்களுக்கு நிம்மதி' என கூற... அன்று இரவே ஊரை விட்டு கிறம்புகிறார்கள் மாதவ படையாச்சியும் அவர் மனைவியும்.
..
நேரே ஆம்பூர் வர அங்கு நாசர் வீட்டுக்கு செல்கின்றனர். அவர் இவர்கள் செய்த உதவி காரணமாக தன் சொந்த வீட்டில் தங்க வைக்கிறார். பின் தங்களுக்கு பக்கத்து கிராமத்திலே தங்கி ஆடு வியாபாரம் செய்ய உதவி கேட்க அதனை நாசர் செய்து கொடுக்கிறார். அதற்கான பணத்தை அவ்வப்போது திருப்பிக்கொடுக்கிறார். பின்னர் அந்த ஊருல மாடுபிடிக்க வரும் தன் சொந்த ஊர்க்காரரிடம் தன் கடைசி மகன் கஷ்டப்படுவதை பார்க்கிறார். அப்போது அவன் அந்த வண்ணார் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கஷ்டப்படுகிறான் என தெரியவருகிறது.
..
அன்று இரவு இந்த சம்பவத்தை தன் மனைவியிடம் கூறுகிறார். அப்போது நாம மட்டும் ஊருலேயே இருந்து இருந்தா அந்த பெண்னை திருமணம் செய்துகொள்ள விட்டுயிருப்போமா என கோபமாக கதறுகிறாள் மனைவி. (மனைவி மட்டும் தான் இந்த விஷயத்தை பற்றி படத்தில் பேசுகிறாள். இறுதி வரை மாதவ படையாச்சி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.)
ஒரு கட்டத்தில் ஊருக்கு சென்று விடுவது என தீர்மானிக்கிறார்கள். காலையில் கிளம்புவதாக இருக்க, அன்று இரவே மனைவியை பாம்பு கடித்து இறந்து போகிறார். இறக்கும் முன் தன் சாம்பலையாவது நம் சொந்த ஊரில் போய் கரைக்கும் மாறு கேட்டுக்கொள்கிறாள்.
..
அதன் பின்பும் ஊருக்கு போக நாசர் சொல்ல, எப்படி மனைவியின் பிணத்துடன் சென்றால் 'என்ன நினைக்கும் ஊர் சனம்' என சொல்லி மறுத்துவிட.... மீண்டும் நாசர் வீடு. பின் நாசர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக பெங்களூர் செல்லும் முன் மாதவ படையாச்சி க்கு 6 ஏக்கர் நிலத்தையும் பணமும் கொடுத்துவிட்டு செல்கிறார்.
..
நிலத்தையும், பணத்தையும் நாசர் மச்சான்கள் பறித்துகொள்ள மாதவ படையாச்சி கிளம்புகிறார். டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு ரோடுகளில் அலைகிறார். இறுதியாக பஸ்-ல் கிளம்புகிறார் சொந்த ஊருக்கு, இதுதான் படத்தின் ஆரம்ப காட்சி. ப்ளாஷ்பேக் முடித்துகொண்டு நள்ளிரவில் சொந்த ஊருக்கு (பத்திரகோட்டை) வருகிறார்கள்.
..
தன் பிள்ளைகள் சொத்துகளை இழந்து கஷ்டப்படுவதையும், தன் கடைசிமகன் வண்ணான் பெண்னை கல்யாணம் செய்ததால் ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்டு முந்திரிக்காட்டில் குடியிருப்பதாகவும் தன்னுடன் வந்த இளைஞனின் அம்மா சொல்கிறாள் பின் ஊருக்குள் நடந்து முந்திரி தோப்பில் இருக்கும் தன் மகன் வீட்டுக்கு போய் பார்க்கிறார். அனைவரும் தூங்கி கொண்டு இருக்க குழந்தை ( மாதவ படையாச்சி பேரன்) மட்டும் "பசிக்குது அப்பா" என அழுதுகொண்டு இருக்கிறது.
..
இறுதியில் ஒருமுறை குழந்தையினை தூக்கி பார்த்துவிட்டு வந்து விடுகிறார் தன் சொந்த வீட்டு திண்ணையில் தூங்குகிறார். அதிகாலை ஒரு மரத்தின் அடியில் இறந்து கிடக்க ஊரே அழுது புலம்ப....மகன்களும், மருமகள்களும் அழுகிறார்கள்."

அன்றாடம் நிகழ்கின்றவற்றை படமாக எடுத்தும் அதில் திட்டமிட்டு சிலவற்றை மறைத்து விடுவதால் மக்களுக்கு உண்மையை அறிய வாய்ப்பு இல்லாமல் போச்சு. ஆனாமுழு பொய்-னை விட அரைகுறை உண்மை ஆபத்தானது என்று தங்கர் மறந்த (மறைத்த) நோட்டை பார்க்கவேண்டியது அவசியம்.
..
படத்தில் வரும் மாதவ படையாச்சியின் வர்க்க பின்னணி என்னவென்று பார்த்தோமானால் ஊரில் வளமான நிலத்துக்கு சொந்தக்காரர். கூடுதலாக படையாச்சி. அதன் உடன் விளைவாக ஆதிக்க சாதி உணர்வில் ஊறி இருப்பவர். பொதுவாக இந்த வர்க்கத்துக்கே உரிய சிந்தனை என்னவென்பதை பலர் பார்த்திருக்கலாம். அந்த சிந்தனையானது வயதான காலத்தில் இத்தகைய ஆண்கள் அதிகார தோரனையில் எதிர்ப்பே இருக்க கூடாது தனக்கு என்று நடந்து வருவார்கள். அவ்வாறு சிந்தித்து வரும் படையாச்சி வாழ்க்கையில் நடக்கும் கதை இது என்பதை கருத்தில் கொண்டு படத்தின் மீதான கண்ணோட்டமே அந்த மறைந்த நோட்டைனை நாம் கண்டறிய முடியும்.
..
சராசரி நிகழ்வுகளான ஒரு சின்ன விஷயத்துக்கு மகனுடன் கோபித்து கிளம்பி போய் இறுதியில் வருகிறார் மாதவ படையாச்சி. ஆனால் அதைவிட பலமடங்கு முக்கியமான தன் கடைசி மகன் ஒரு வண்ணான் வீட்டு பெண்னை காதலித்தையும், திருமணம் செய்து கொணடதையும் கண்டித்து தன் மனைவி பேசிய போது மெளனமாகவே அதனை ஆமோதிக்கிறார் மாதவ படையாச்சி.
..
தன் மாமன் வீட்டு பெண்னை சொந்த சாதியினை சேர்ந்தவன் காதலித்து கர்ப்பம் ஆக்கியதை கேட்டு அவனை அவளுக்கு திருமணம் செய்து வைக்கிற படையாச்சி அதுவே தன் வீட்டில் நடக்கும் போது பெண் வன்னார் இனத்தை சேர்ந்தவர் என்பதால் மெளனம் சாதித்து ஆமோதிக்கிறார்.
..
இங்கு தான் படையாச்சி வர்க்கபார்வையினை சற்றுகீரி பார்க்க வேண்டும்.கதையில் படையாச்சி மகள் இருந்து அவள் ஒரு வண்ணான் வீட்டு பையனை காதலித்து கர்ப்பம் தரித்து இருந்தால் என்ன செய்துயிருப்பார். இதனை திரைப்படத்தில் கவனாமாக தவிர்த்து கதைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை திரையில் தேடினால் பார்க்க முடியாது. நிஜத்திலேயே பார்க்க முடியும்.
..
2003-இல் வன்னியர் சாதியை சேர்ந்த கண்ணகி தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த முருகேசனை காதலித்ததால் இருரையும் விஷம் கொடுத்து கொன்றனர் வன்னிய சாதிவெறியர்கள். போன மாதம் வன்னியர் சாதியை சேர்ந்த சங்கர் என்ற ஐ.டியில் வேலை பார்ப்பவன் தன் அக்கா நாயக்கர் சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்ததை அடுத்து கர்ப்பினியான அக்காவை அழைத்து வந்து அப்பனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டான்.இதனை எல்லாம் படத்தில் வைக்க முடியாது என்பதலேயே அதற்கேற்ப கதையினை மாற்றி மெளனமாகி விட்டார் மாதவ படையாச்சி. காரணம் என்னவென்றால் இந்த படையாச்சி வேற யாரும் இல்லை தங்கர்பச்சான் தான்.
தங்கர்பச்சான் பற்றி தெரிந்து கொண்டால் மாதவ படையாச்சி சொல்லாதவற்றை அறிய முடியும்.
..
சாதித்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கு தன் சாதிபற்று(வன்னிய) காரணமாக அவருடைய தேர்தல் பிரச்சாரத்தை தயாரித்து வழங்கியவர் தங்கர்பச்சான் அவர்கள்.
..
பின்னர் 'மருத்துவர்' ராமதாஸ் அவர்கள் தங்கள் வன்னியர் சாதிக்கு துரோகம் செய்கிறீர்கள், தலித்துகளுக்கு வக்காலத்து வாங்கி வருகிறீர்கள் எனவும் "டாக்டர் ஐயா அவர்களுக்கு மனம் திறந்த மடல்" என எழுதியவர்களில் தங்கர்பச்சானும் ஒருவர்.
..
ஆதலால் படத்தில் மாதவ படையாச்சி தன் மகன் அந்த பெண்னை தனது மகன் மண உறவு இல்லாது (தொடர்பு) மட்டும் வைத்து இருந்தால் இதனை வெளிப்படையாகவே ஆமோதித்து மகிழ்ந்து இருப்பார் படையாச்சி எனபதே யதார்த்தமாக இருக்கிறது.
..
மொத்தத்தில் படத்தில் 'நிலப்பிரபுத்துவம்' மற்றும் 'சாதி பெருமை'யினை கதாநாயகன் மாதவ படையாச்சி மூலம் தங்கர்பச்சான் அவர்கள் யதார்த்தம் என்று தூக்கி நிறுத்துகிறார்.யதார்த்தம் என்று சாதிவெறியினை காண்பிப்பதை ஒத்துக்க முடியுமா, உன் கருத்தை என்ன அதில் என்று சொல்லு என்பது தான் இந்த போலி யதார்த்த கலைஞர்களை சட்டையினை பிடித்து கேட்க வேண்டிய கேள்வி.
..
இதற்கிடையில் படத்தில் ஆங்காங்கே விஷமக் கருத்துக்களை தூவி இருக்கிறார்.
..
ஊருக்கு வரும்போது விவசாயம் பொய்த்து போனதற்கு மாதவ படையாச்சி சொல்கிறார், பூச்சி மருந்து போட்டதால தான் இந்த நிலைமை என. பூச்சி மருந்து போட்டு தான் ஆக வேண்டும் என்ற விதைகளை உருவாக்கி இரண்டை லாபத்தை பன்னாட்டு கம்பெனிகள் பார்ப்பதற்கு 'பசுமை புரட்சி' என்ற பெயரில் வழி ஏற்படுத்தி கொடுத்ததே ஆட்சியாளர்கள் தான். தங்கர் என்னான்னா பூச்சி மருந்து என்று 2007-ல வந்து பூ சுற்றுகிறார்.
..
லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நாட்டில், விவசாயத்திலிருந்து துரத்தபட்டு தினமும் ஆயிரக்கணக்கனவர்கள் இந்திய பெருநகரங்களில் கூலிகளாக மாறிவருகின்ற சூழ்நிலையில் இதற்கான காரணத்தை பூச்சி மருந்துகளில் ஆராய்கிறார் தங்கர்பச்சான்.
..
ஊருக்கு வந்து குழாய் தண்ணீரில் குளிக்கும் போது ஏன் இப்ப கிணற்றில் இருந்து தண்ணீர் கிடைக்கலையா என்று படையாச்சி கேட்க, அதற்கு அந்த இளைஞன் "எப்படி கிடைக்கும் அதான் பக்கத்து நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் வெட்டி மின்சாரம் தயாரித்து பக்கத்து மாநிலத்துக்கு கொடுக்கிறார்களே, அதனால 200 அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பது இல்லை" என்கிறார்.
..
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை தினமும் கோக்-ம், பெப்சி-யும் எடுத்து பாட்டில் போட்டு "ஆற்றுபடுக்கைகளை" விற்றுக்கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் தங்கர்பச்சான் தமிழின வெறியினை தண்ணீர்-ல தேடுகிறார்.
..
ஊருக்குள் நடந்து போகும் போது அந்த இளைஞன் ஒரு கொடியினை காட்டி இந்த 'மஞ்சள்- நீல கொடி' தான்யா இப்ப 'பெரிய கட்சி' என பா.ம.க வை சுட்டிக்காட்டுகிறார். ஊருள எங்கபார்த்தாலும் மாம்பழ சின்னமாக தான் ஒளிப்பதிவு வேறு தெரியுது . பா.ம.க ஒரு வேளை ஸ்பான்சர் செய்து இருக்கலாம் என யோசிக்காதிங்க, இயக்குனரே பா.ம.க அனுதாபி(இது டிசம்பர் 2007 அப்டேட்)என்பதால் திட்டமிட்ட ஒளிப்பதிவுகள் இவை.

மற்றபடி வைரமுத்து பாடல் வரிகளை பற்றி கூறியே ஆக வேண்டும்.

மார்கழில குளிச்சுபாரு குளுரு பழகி போகும்!
மாதவனா வாழ்ந்துபாரு வறுமை பழகி போகும்!
வறுமை பழகிபோனா வாழ்க்கை பழகி போகும்!
சந்தோஷம் வெறுத்துபோனா சாவு பழகி போகும்!
..
"பழகி போகும்,பழகி போகும்" என்கிறாராரே இவரு பொன்னுமனி மாளிகை, தாய் பென்கள் விடுதி என இவரிடம் இருந்து எல்லாத்தையும் வாங்கிட்டு ஆளை சொந்த ஊருக்கே அனுப்பிவைப்போம், வாழ்க்கை பழகி போகும் என போவார்களா இந்த வைரமுத்துகள்.

Monday, December 24, 2007

"என் ராசாவின் மனசிலே...."கண்ணீர்த் துளிகளால் ஒரு கைவிலங்கு

கதாநாயகன் உலகெங்கும் தேடினாலும் கிடைக்காத உத்தமனாகவே இருக்கட்டும். முறைப்பெண்ணானாலும் விருப்பமில்லையெனில் நிர்ப்பந்தப்படுத்திக் கட்டிவைப்பது என்ன நியாயம்? "வேற எவனாவது பரிசம் போட்டுறுவானா? பொண்ணத் தூக்கிட்டே போயிருவான் என் மகன்" என்று சவால் விடுகிறாள் கிழவி. முறைமாமன் வேறு பெண்ணுக்குப் பரிசம் போட்டால் முறைப் பெண் மாமனைக் கடத்திக் கொண்டு போகலாமா?
..
இப்படியொரு கேள்வியே கேட்க முடியாதபடி கிழவி வாய்திறக்கும் போதெல்லாம் தத்துவமாய்க் கொட்டுகிறது. 'ஒரு பொண்டாட்டி புருசன்கிட்ட என்ன எதிர்பாக்குறா தெரியுமா? எச்சில் சோறும் ஒரு முழம் பூவும்தான்" - இது மகனுக்குச் சொல்லும் உபதேசம். 'எப்பேர்ப்பட்ட முரடனா இருந்தா என்னடீ. பொஞ்சாதி முந்தானையை மிஞ்சுனவன் எவனுமில்ல" இது மருமகளுக்கு.
புகுந்த வீட்டில் கணவனின் அடிமை, படுக்கையறையில் தாசி எனும் 'நீதி'யை நினைவூட்டும் வரிகள்.

..
முழுவிமர்சனமும் கீழே இணைக்கப்பட்டு உள்ளது
*******************************************************************

Friday, December 21, 2007

சினிமா: திரை விலகும் போது...

தமிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகத் திரையுலகின் பால் கொண்டிருகும் உணர்ச்சிகரமான ஈடுபாடு என்பது. 365 நாட்களும் திரையுலக மாந்தர்களின் நிழல் மற்றும் நிஜக்கதைகளைக் கண்டு, கேட்டு, படித்தும்தான் கழிக்க முடியும் என்றாகிவிட்டது. பொங்கலும், தீபாவளியும் ஏன் அரசு விழாக்களான குடியரசு தின, சுதந்திர தினங்கள் கூட வெள்ளித் திரையின்றிக் கொண்டாட முடிவதில்லை. திரையுலகக் கிசுகிசுக்களைப் படிக்கும் வழக்கம் நமது மக்களின் வாசிப்பு முறையையே மாற்றி விட்டது. செய்தி ஊடகங்களும் அரசியல் - சமூகச் செய்திகளைச் சினிமா போல சூடு குறையாமல் பரபரப்புடன் விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் திரைப்பட விமரிசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாலும் , சினிமா மீது சமூக நோக்கிலான விமரிசனக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதையே தமிழ்ப் பத்திரிக்கைகள் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு திரைப்படத்தில் விறுவிறுப்பு இருக்கிறதா, இல்லையா என்ற மலிவான ரசனையைத் தான் குமுதம், விகடன் முதலான வணிகப் பத்திரிக்கைகள் விமரிசனமென்ற பெயரில் கற்றுத் தருகின்றன. இதை 'தினத்தந்தி' பாணி விமரிசனம் என்று தரங்குறைந்ததாகக் கருதும் சிறு பத்திரிக்கையோ, சினிமா என்ற அறிவியலின் தொழில்நுட்பங்கள் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கின்றன. முன்னது ரசிகனது கைதட்டலையும், பின்னது படைப்பாளியின் 'மேதைமையையும்' வியந்தோறுகின்றன.

எமது விமரிசனங்கள் இவ்விரண்டிலிருந்தும் வேறுபடுகின்றன. ஒரு இயக்குநரின் வாழ்க்கை குரித்த கண்ணோட்டம், அது காதல், குடும்பம், தேசப்பத்தி, மதநல்லிணக்கம் என எதுவாக இருந்தாலும் சினிமா என்ற முன்னேறிய கலையின் மூலன் யாருடைய நலனுக்காக, எப்படி வெளிப்படுகிறது, ஒரு ரசிகனை உணர்ச்சிவசப்படுவதன் மூலமாக எவ்வாறு பலவீனமாக்குகிறது என்பதைத்தான் எமது விமரிசனங்கள் கண்டுபிடிக்க விரும்புகின்றன. முக்கியமான ஆளும் வர்க்கக் கண்ணோட்டம் ஒரு இயக்குநரின் அற்பவாத உணர்ச்சி என்ற ·பார்முலாவில் குழைக்கப்பட்டு , ஒரு ரசிகனின் சமூகக் கருத்தை மறைமுகமாகப் பாதிப்பதுதான் சினிமாவின் பலம், இந்த ரசிகர்களில் சாதாரண நபர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அறிவுஜீவி ரசிகர்களும், இன்ன பிற அறிவாளி, பேராசிரியப் பெருமக்களும் உண்டு.

அதனால் தான் எம்மால் விமரிசனம் செய்யப்பட்ட படங்கள் பல இவர்களால் பாராட்டும், பரிசும் கொடுத்துப் புகழப்பட்டன. பம்பாய், மகாநதி, வேதம் புதிது, அழகி இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். அவ்வகையில் எமது விமரிசனப் பார்வை தமிழில் தனித்து நிற்கின்றன. அதேசமயம் எந்த அளவுக்குத் தனித்து நிற்கின்றனவோ அந்த அளவுக்கு மக்கல் நோக்கிலான ஒரு சமூகக் கண்ணோட்டத்தைக் கூர்மையாக உருவாக்கியும் வருகின்றன.

செல்வாக்கு மிக்க திரையுலக ரசனையிலிருந்து மக்களை மீட்டெடுத்து புதிய ஜனநாயகப் பண்பாட்டை,அதன் உண்மையான அழகை அடையாளம் காட்டுவதற்கு இவ்விமரிசனங்கள் உதவி செய்யும். புதிய கலாச்சாரம் ஏட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக ஹாலிவுட் முதல் தமிழ்த் திரையுலகம் வரை பல படங்கள் மீது வெளியான இவ்விமரிசனங்கள் , எந்த ஒரு திரைப்படத்தையும் சமூக நோக்கிலிருந்து அணுகுவதற்கு வாசகருக்குப் பயனளிக்கும்.

வெளியீடு & தொடர்புக்கு:
***********************************
புதிய கலாச்சாரம்
# 16, முல்லை நகர் வனிக வளாகம்,
இரண்டாவது அவென்யூ,
அஷோக் நகர்,
சென்னை. 600 083.
தொலை பேசி - 044-23718706.
..
பக் 205, விலை ரூ 70..
கிடைக்குமிடம்
******************
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,எல்லீசு சாலை,சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367

திரைப்பட விமரிசனம் : தோகீ என் பாடல் துயரமிக்கது !


கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளர் சாய்நாத் இந்திய விவசாய வர்க்கம் நொறுங்கிச் சிதறுவதை உயிருள்ள சாட்சிகளாக தமது ஆங்கிலக் கட்டுரைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பன்னாட்டு உரக் கம்பெனிகள், விதைக் கம்பெனிகளின் படையெடுப்பின் விளைவாகவும், அவர்களது காலை நக்கி விவசாயிகளின் கழுத்தறுக்க துணை நின்ற அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளின் துரோகத்தின் விளைவாகவும், மென்னி முறிக்கும் கந்துவட்டிக் கொடுமையின் விளைவாகவும் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அவ்விவசாயிகளின் வாழ்க்கையை ஆதாரபூர்வமாக அக்கட்டுரைகளில் நாம் காண முடியும்.
..
கடன் வாங்கிய பணத்தில் மகளின் கல்யாணம், அதே நாளில் மருந்தைக் குடித்துச் செத்த தகப்பனின் கருமாதி, ஊரைவிட்டு வெளியேறி பெயர் தெரியாத ஊரில் அநாதைகளாக மருந்தைக் குடித்துச் செத்துப் போன குடும்பங்கள், தங்கள் உடல்களைக் கூட தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டாமென கடிதம் எழுதி வைத்துவிட்டு செத்துப் போன விவசாயிகள்.... எத்தனைக் காட்சிகள்?
..
சிந்தித்துப் பாருங்கள். ஷில்பா ஷெட்டியின் விளம்பர அதிகாரிகளைப் போல அவ்விவசாயிகளுக்கு யாருமில்லை. அதனால் புள்ளி விவரங்களாய் மட்டும் செய்தி ஊடகங்களைக் கடந்து, மறைந்து போய்விட்டனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
..
அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருப்பார்கள்? குடும்பத்தின் தலைவன் போன பின்னால், அரசின் பிச்சைத் தொகை அவர்களுடைய வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது? அவர்களது வாழ்க்கை தலைகீழாக ஏன் மாறியது என்றாவது அவர்களுக்குத் தெரியுமா? அவர்களை விளிம்பிற்கு நெட்டித் தள்ளும் வாழ்க்கையில் அதிர்ச்சியோ, மனப்போராட்டமோ, கண்ணீரோ, கதையோ இல்லையா? பின்னர் ஏன் இந்த நாட்டின் சிறுகதைகளில், நாவல்களில், செய்திக் கட்டுரைகளில், திரைப்படங்களில் அவர்கள் இல்லை?
..
பொறுக்கி வீரர்களின் பொறுக்கித்தனங்களிலும், மல்லாக் கொட்டைகளிலும் மாய்ந்தெழுந்து, கிராமப்புறங்களின் "யதார்த்த' வாழ்வைச் சொல்லும் சினிமாக்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கும் படைப்புலக பிரம்மாக்களின் கலை உணர்ச்சி, இந்த யதார்த்தமான, கவர்ச்சியற்ற, தேய்ந்தழியும் உண்மையான கிராம வாழ்க்கையை ஏன் கதைக் கருவாக ஏற்க மறுக்கிறது? அவர்களுக்கு, இயல்பான சோகம் "போர்' அடிக்கிறது.அத்தகைய "போர்' அடிக்கும் திரைப்படமொன்றை நான் சமீபத்தில் பார்த்தேன். 1995இல் சுமித்ரா பாவே என்பவரால் உருவாக்கப்பட்ட தோகீ (இரு பெண்கள்) எனும் அந்த மராத்தியத் திரைப்படம், 1996இல் சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படமாக தேசிய விருது கொடுத்து முடக்கப்பட்டு விட்டது. "அவார்டு' படம் என்றான பின்னால் அது மக்கள் பார்க்கத்தகாதது என்பது இந்தியச் சினிமாவின் அடிப்படை விதிகளில் ஒன்று. உண்மையில் இத்திரைப்படம் வழக்கமான "அவார்டு' படங்களுக்கு நேர் எதிரான முறையில் உரக்கப் பேசும் கதாபாத்திரங்கள், பாடல்களுடைய படமே.
..ஒரு வறிய மகாராஷ்டிர கிராமப்புறத்தில் வாழும் கௌரி, கிருஷ்னே என்ற இளம் சகோதரிகளின் வாழ்க்கைதான் இப்படத்தில் மையக்கரு. மூத்தவளான கௌரியின் திருமணத்திற்கு முந்தைய இரு நாட்களிலிருந்து படம் துவங்குகிறது. உறவினர்கள் சூழ திருமண மகிழ்ச்சியில் குடும்பமே திளைக்கிறது. அதனைக் குலையறுக்கும் விதமாக மணமகன் வீட்டார் மொத்தமும் வரும் வழியில் விபத்தில் இறந்து விட்ட செய்தி வந்திறங்குகிறது. அதிர்ச்சியில் தகப்பனுக்கு வாதம் வந்து விடுகிறது. குடும்பம் இடிந்து போகிறது.அதிர்ஷ்டம் கெட்ட சனியனாக கௌரி ஊரால் பழிக்கப்படுகிறாள். வாதத்தினால் படுக்கையில் கிடக்கும் கணவனையும், இரு மகள்களையும், சிறுவனான மகனையும், மூழ்கடிக்கும் கடன்களையும் சுமக்க வழியின்றி கௌரியின் தாய் திணறுகிறாள். நிலங்களையும், மாடுகளையும், எஞ்சியிருக்கும் நகைகளையும் விற்று உயிர் வாழப் போராடுகிறாள். கடன்காரர்கள் சுற்றி நெருக்குகிறார்கள். நாட்பட நாட்பட கௌரி பித்துப் பிடித்தவள் போல நிலை வெறித்துக் கிடக்கிறாள். ஊர் அவளை சூனியக்காரி என ஏசுகிறது.
..
செய்வதறியாமல் விசும்பும் தாய், பம்பாயில் மில்லில் வேலை செய்யும் தனது தம்பிக்குக் கடிதம் எழுதி வரவழைக்கிறாள். கௌரி இங்கே ஊராரிடம் வதைபடுவதிலிருந்தும், அவளால் அவளது தங்கை, தம்பி வாழ்க்கையும் பாதிக்கப்படுவதிலிருந்தும், சோத்துக்கே வழியற்றுக் கிடக்கும் நிலையிலிருந்தும் விடுபட, அவளை பம்பாய்க்கு அழைத்துச் சென்று ஏதேனும் வேலைக்குச் சேர்த்து விடும்படிக் கூறுகிறாள். சிந்திக்கும் தம்பி "சரி அழைத்துச் செல்கிறேன், ஆனால் என்ன வேலை எனக் கேட்கக் கூடாது, மணியார்டர் மட்டும் மாதாமாதம் வந்து விடும்' என்கிறான். அதிர்ந்து போகிறாள் தாய். வேதனையில் குமுறியவாறு, இறந்து போன மாப்பிள்ளை வீட்டாரோடு மகள் திரும்பிப் போகும்பொழுது இறந்ததாகக் கருதிக் கொள்ள வேண்டியதுதான் என்கிறாள்.
..
இரவு முழுவதும் தூங்காமலிருக்கும் தாய், அதிகாலையில் தம்பியை எழுப்பி கௌரியை அழைத்துச் செல்லும்படி கூறுகிறாள். இவையெதுவும் அறியாத கௌரி, ஏதோ வேலைக்குச் செல்வதாகக் கருதி மாமனோடு ஊரிலிருந்து மௌனமாக வெளியேறுகிறாள். பரிதவிப்போடு கிருஷ்னேயும், அவளது தம்பியும் அவளைப் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பி வைக்கிறார்கள்.மாதா மாதம் மணியார்டர் வருகிறது. மணியார்டர் பணத்தை வாங்கும் நாளில் தாய்க்கும் கிருஷ்னேக்கும் இடையே ஒரு இறுக்கமான மௌனம் நிலவுகிறது. தன்னுடைய அக்காள் எங்கேயோ உடல் வருந்த உழைத்து பணம் அனுப்புகிறாள் என வருந்தும் கிருஷ்னே, மணியார்டர் துண்டுக் காகிதத்தைக் கூட சேர்த்து வைக்கிறாள். ஒரு கனத்த மௌனத்தினூடாகக் காலம் உருண்டோடுகிறது.
..
பம்பாயிலிருந்து மாமன் வீட்டிற்கு வருகிறான். இரவில் தாய் அவனிடம் கௌரி குறித்து வினவுகிறாள். அவன் தான் அங்கே போவதில்லை என்கிறான். தானும் முன்பெல்லாம் அங்கே சென்று கொண்டிருந்ததாகவும், இப்பொழுது அங்கே செல்ல மனம் வரவில்லை எனவும் கூறுகிறான். தான் ஒரு பெரும் பாவம் செய்து விட்டதாகவும், உணவும், உறக்கமும் கூட அற்றுப் போய் விட்டதாகவும் வருந்துகிறான்.
..
கிருஷ்னேக்கு மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் ஒரு இளைஞனோடு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மாதா மாதம் வரும் மணியார்டரோடு இம்முறை முதல் முறையாக கௌரியிடமிருந்து கடிதம் வருகிறது. திருமணம் குறித்து அறிந்து கொண்டதாகவும், புடவைகள், பட்சணங்களோடு தான் வருவதாகவும் அக்கா கூறுகிறாள். வெம்மை படர ஊரை விட்டுச் சென்ற கௌரி, ஒரு அதிகாலைப் பொழுதில் வந்து சேர்கிறாள்.
..
அக்காவினுடைய பகட்டான சேலையையும், முகத்தில் தோன்றும் அந்நியப்பட்ட தன்மையையும் கண்டு கிருஷ்னே துணுக்குறுகிறாள். தனது கல்யாணத்தோடு அவளும் கல்யாணம் செய்து கொண்டாலென்ன எனக் கேட்கிறாள். தனக்கு நிறையவே கல்யாணங்கள் நடந்து முடிந்து விட்டதாகவும், இனி தனக்குக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லையெனவும் கௌரி கூறுகிறாள். புரியாத கிருஷ்னே, "நீ ரொம்பவும் மாறிப் போய்விட்டாய் அக்கா' என்கிறாள். குளித்துக் கொண்டிருக்கும் கௌரிக்கு நீரூற்றச் செல்லும் தாய், அவளது முதுகிலுள்ள தீக்காயத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கிறாள்.
..
உறவினர்கள் வருகின்றனர். திருமணத்திற்கு முதல் நாள் சடங்குகள் நடக்கின்றன. பெண்களோடு இணைந்து இனிப்புகள் பரிமாறத் தட்டெடுக்கும் கௌரியை, தாய் முறைக்கிறாள். நீ ஏன் குறுக்கே வருகிறாய் எனக் கடிந்து கொள்கிறாள். கௌரி மௌனமாக வெளியேற, ஆத்திரம் கொள்ளும் கிருஷ்னே, ""கௌரி வேண்டாம், ஆனால் கௌரி கொடுக்கும் காசு மட்டும் உனக்கு வேண்டுமா?'' என வாதிடுகிறாள். பதில் பேச முடியாமல் தாய் அறையை விட்டு வெளியேறுகிறாள். கௌரியைப் பின் தொடரும் கிருஷ்னே, வேண்டுதல் துணி முடியும் மரத்தினடியில் அவளைக் காண்கிறாள். அவளருகில் மௌனமாகச் சென்றமர்கிறாள்.அந்தப் பக்கமாய், மாப்பிள்ளையும், அவனது நண்பர்களும் உலவ வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் குமுறியெழும் கிருஷ்னே, அவர்களை நோக்கிக் கத்துகிறாள். ""இங்கே பாருங்கள், இவள்தான் என்னுடைய அக்கா, இவள் என்னை விட நன்றாகப் பாடுவாள். என்னை விட்டு விடுங்கள். இவளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். சமூக மாற்றத்திற்காகப் போராடுகிறீர்களே, இதோ என்னுடைய அக்காக எங்களுக்காக உழைத்து உழைத்து தேய்ந்து நிற்கிறாள். இவளுக்கு வாழ்க்கை கொடுங்கள்!'' எனக் கதறும் கிருஷ்னேயை, கௌரி இழுத்துச் செல்கிறாள். மாப்பிள்ளையும், நண்பர்களும் புரியாமல் நிற்கின்றனர்.திருமணம் நடக்கிறது. ஒதுங்கி நிற்கும் அக்காவை நொடிக்கொரு முறை கிருஷ்னே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொள்கிறாள். அவள் பார்வையின் திசை வழியே எல்லோரும் கௌரியைப் பார்த்து சங்கடமான மௌனத்தில் ஆழ்கிறார்கள். கௌரி மெல்ல விலகி மறைகிறாள். தாலி கட்டும் நேரத்தில் எழுந்து வெளியேறும் கிருஷ்னே, அக்காவைத் தேடியோடுகிறாள். அனைவரும் அதிர்ச்சியுறுகின்றனர். ஊரை விட்டு வெளியேற நடந்து செல்லும் கௌரியை, கிருஷ்னே வந்து பிடித்துக் கொள்கிறாள். அவள் பம்பாய்க்குப் போக வேண்டாமென்றும், எப்படியாவது இங்கேயே கஷ்டப்பட்டு தலை நிமிர்த்தி முன்னேறுவோம், அவமானமும், சார்ந்திருக்கும் அவலமும் வேண்டாம் எனக் கூறுகிறாள்.
..
மாமனும் வந்து சேர்கிறான். கௌரி ஊரை விட்டுப் போக வேண்டாமென்றும், தாங்கள் அனைவரும் செய்து விட்ட பாவத்தை மன்னிக்கும்படியும் வேண்டுகிறான். கௌரியை திருமண வீட்டிற்குத் திரும்ப அழைத்து வரும் கிருஷ்னே, காத்திருக்கும் எல்லோருக்கும் முன்பாக அம்மாவிடம் கௌரி திரும்ப வந்திருப்பதைக் கூறுகிறாள். கௌரியை கட்டித் தழுவிக் கொள்ளும் தாய், இனி அவள் பம்பாய் போக வேண்டாமென்றும் பட்டினி கிடந்து செத்தாலும் சரி, இங்கேயே இருக்குமாறும் வேண்டியழுகிறாள். படம் முடிவடைகிறது.
··
இக்கதை விவசாயிகளின் பிரச்சினையை, அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போடும் உண்மையான சக்திகளை நேரடியாகச் சொல்லவில்லை. வாதத்தில் விழுந்த கௌரியின் தந்தை வாதத்தில் விழுந்த விவசாயத்தின் உருவகம் என்றும் கொள்ளலாம். ஒருவேளை மணமகனின் குடும்பம் விபத்தில் சாகாமல் இருந்திருந்தால், விவசாயி வாதத்தில் விழாமல் இருந்திருந்தால், என்ன நிகழ்ந்திருக்கும்?
..
மான்சாண்டோ விதைகளைப் பயிரிட்டு மகசூலுக்காகக் காத்திருந்து, பின்னர் பொய்த்துப் போன பருத்திப் பயிர்களைக் கண்டு மனமொடிந்து செத்த விவசாயிகளைப் போல, அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார். குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாமென முடிவு செய்யாத பட்சத்தில், கதையில் நிகழ்ந்ததைப் போலவே கௌரி மும்பைக்கு ரயிலேறியிருப்பாள். உடலால் தற்கொலை செய்து கொள்வது அல்லது உள்ளத்தால் தற்கொலை செய்து கொள்வது இரண்டிலொன்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு சமூகம் அவர்களைத் தள்ளுவதை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.ஒரு விவசாயியைப் பொறுத்தவரை தான் கொண்டிருக்கும் அறம் சார்ந்த விழுமியங்களிலிருந்து வழுவுவதென்பது ஒரு வகை மரணம்தான். உண்மையான மரணத்தை எதிர்கொள்வதற்கு அதிகம் தடுமாற்றம் காட்டாத தாய், மகளை பம்பாய்க்கு அனுப்பும் முடிவில் லேசாகத் தடுமாறுகிறாள். பம்பாயில் என்ன வேலை என்று மாமன் உடைத்துச் சொல்லவில்லை. சொல்லாத போதிலும் விளங்கிக் கொள்கிறாள் தாய். பசி அறத்தைத் தின்னுகிறது.இப்படித்தான் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிகளின் வீதிகளில் ஒவ்வொரு நாளும் கெளிரிகள் வந்திறங்குகிறார்கள். கௌரிகளுடைய நிலங்களையும், வயல்களையும், பன்னாட்டுக் கம்பெனிகள் துகிலுரிய வழிவகுத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன், பொறுக்கி வரை அனைவரும் அவர்களைத் துகிலுரிகிறார்கள்.இன்று சிங்கூரிலிருந்தும், நந்திகிராமத்திலிருந்தும் விரட்டியடிக்கப்படும் விவசாயிகள் நாளை கல்கத்தாவில் அத்துக் கூலிகளாய் வந்து வீழ்வார்கள். ரத்தன் டாடாவும், மார்க்சிஸ்டுகளும் கோடிகளையும், நிலங்களையும் பண்டம் மாற்றிக் கொண்டு படுத்துறங்கும் வேளையில் கௌரிகளும், கிருஷ்னேகளும் சோனாகஞ்சியில் துகிலுரியப்படுவார்கள்... வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தப் புண்ணிய தேசத்தின், இந்த வளர்ந்து வரும் வல்லரசின் சாதனைகளில் ஒன்று என்ன?
..
மொழி, இன, சாதி எல்லைகளைக் கடந்து உ.பி.யிலிருந்தும், பீகாரிலிருந்தும், மகாராட்டிரத்திலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் "நூறு ரூபாய்க்கு கூட பெறுமானமில்லாத' மூஞ்சிகளைப் பெற்ற (உபயம்: பருத்திவீரன்) விவசாய வர்க்கப் பெண்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் காமாட்டிப்புராவில், சோனாகாஞ்சியில் கைகாட்டி நிற்கிறார்கள். நேபாளப் பெண்கள் மும்பை விபச்சார சந்தையில் 3,4 ஆண்டுகள் தம்மை விற்று தமது திருமணத்திற்கான தொகையைச் சேமித்துக் கொண்டு சென்று, திருமணம் செய்து கொள்கிறார்கள். மாதாமாதம் வீட்டுக்கு மணியார்டர் போகிறது.
..
இப்படத்தில் வரும் கௌரியின் மாமன் மன உறுத்தலால் விபச்சார விடுதிக்குப் போவதையே விட்டு விடுகிறான். கன்னட பிரசாத் எனும் விபச்சாரத் தரகனைப் பற்றி செய்தியெழுதும் போர்வையில் அவனது ஆல்பத்திலுள்ள நடிகைகளின் பெயர்களை மயிர் பிளக்கத் துப்பு துலக்கி, பின்னடித்த புத்தகங்களை மிஞ்சும் வகையில் சர்வ அவசியத் தகவல்களோடு, வாசகனின் சபலத்தைத் தூண்டும் மஞ்சள் பத்திரிக்கைகளின் புரோக்கர் கண்ணோட்டத்தையும், அதனையே ஒரு விவசாயியின் கண்ணோட்டத்தில் சொல்லும் இத்திரைப்படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.விவசாயிகளுடைய வாழ்க்கைச் சித்திரத்தின் மையக் கோடுகளைத் தொட்டு விரிந்து, விமரிசனப் பார்வையோடு இப்படம் மிளிரவில்லை என்பது உண்மைதான். ஆனால், உலகமயமாக்கம் வழங்கும் கோலாகலமான, செயற்கை உலகத்தில், விமரிசனமில்லாத இந்த யதார்த்தம் கூட மதிக்கத்தக்க மாற்றாகத்தான் இருக்கிறது.
..
பெண் பார்க்கும் நிகழ்வில் பாடச் சொல்லும் பொழுது, தொலைதூரத்தில் வருந்த உழைக்கும் தனது அக்கõளின் நினைவாகவே வாழும் கிருஷ்னே அத்தருணத்தில் கூடத் தங்களது கையறு நிலையை மறக்கவியலாது பாடுகிறாள்."
..
"நிலம் பாளங்களாக வெடித்துக் கிடக்கிறது.துளிநீர் கூட கண்ணில் தட்டுப்படவில்லை.என் பாடல் துயரம் மிக்கது,என் பாடல் துயரம் மிக்கது.''
..
-பால்ராஜ்

Thursday, December 20, 2007

ஹேராம் கதையா? வரலாறா?


வரலாற்றையும் கதையையும் இணைக்கும் விதிக்கு ஒரு விளக்கம் சொன்னார் எழுத்தாளர் சுஜாதா."காந்தியை சுட்டது கோட்சே தான். அது வரலாறு.கமலாஹாசன் சுட முடியாதே" என்றார்.


காந்தியை கோட்சே சுட்டது வரலாறல்ல. வரலாற்றால் ஒரு சம்பவம்.அவ்வளவுதான். கோட்சே இல்லையின்றால் அவனது குருநாதன் நீட்சே சுட்டு இருப்பான். ஆனால் அந்த சம்பவத்துக்கு இட்டு சென்ற அரசியல் சமூக நிகழ்ச்சி போக்கு இருக்கிறதே - அதுதான் வரலாறு. சகேத்ராமனின் கதை அந்த வரலாற்றை பிரதிபலிக்கவில்லை.


இத்தனையும் மீறி இந்தப் படத்தின் அழகியல் உங்களை மயக்குகிறது என்றால் அதற்காக நீங்கள் கூச்சப்படவேண்டியதில்லை.மயக்கம் தெளிவிக்கும் மருந்து அரசியல் கூர்மையும், வர்க்க உணர்வும்தான்.


என்னுடைய அழகியலை உன்னுடைய அரசியலால் விமர்சிக்காதே, என்று கூறும் கலை ஆராதர்கள் " உன்னுடைய கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று கேட்காதே" எனப் பதில் சொல்லலாம். உன்னுடைய கவிதை சாகேதராமனின் பெரியம்மாள் செத்ததைப் பற்றிதாக இருந்தால் சரி; அது நம்முடைய தேசத்தின் மரணத்தைப் பற்றியதல்லவா?


இந்தக் கேள்வியை எதிர்பார்த்து, தந்திரமாக முதல் காட்சியிலேயே இதற்கு மடையடைத்து விட்டார் கமலஹாசன். "எங்க தாத்தா எப்பவுமே ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னு கதை சொல்லமாட்டார். நான் இருந்த ஊர்ல ஒரு ராஜான்னுதான் சொல்லுவார்" என்கிறான் சாகேதராமனின் பேரன்.


'எக்ஸ்கியுஸ் மி ' என்று சொல்லிவிட்டு பிக்பாக்கெட் அடிக்க அனுமதிக்கலாமென்றால், "சாகேத்ராமன் வாழ்ந்த நாட்டில் ஒரு மதக்கலவரம்" என்று 'வரலாற்று கதை' சொல்லவதையும் அனுமதிக்கலாம்.


ஓமர் முக்தார் திரைப்படத்தின் கடைசிக் காட்சியிக் அவர் தூக்கிலிடப்பட்டவுடன் கீழே விழுந்த அவரது மூக்குக் கண்ணாடியைப் பத்திரப்படுத்துவான் ஒரு சிறுவன். அரங்கமே கண் கலங்கும்.


காந்தியின் கண்ணாடியையும் சாகேதராமன் எடுத்து கொள்கிறான். கண்ணாடிக்குரியவரின் வரலாறோ, எடுத்தவரின் கதையோ யாரையும் கண்கலங்க செய்யவில்லையே!

(விமர்சனத்திலிருந்து )


புதிய கலாச்சாரம் மார்ச் 2000 வந்த இதன் முழு விமர்சனமும் இணைக்கப் பட்டுள்ளது.
********************************************************************
http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/heyram-1.jpg
.
http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/heyram-2.jpg
.
http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/heyram-3.jpg
.
http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/heyram-4.jpg
.
http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/heyram-5.jpg
.
நன்றி: புதிய கலாச்சாரம்
******************************************

தொடர்புடைய பதிவுகள்
******************************************
காந்தி நல்லவரா? கெட்டவரா?
காந்தியசத்தைவிட கொடியதொரு இசம் எது? - மா. சிவகுமார்
அஹிம்ஸை - ஒரு அபாயகரமான அதி பயங்கர வன்முறையே!

நாகரீகக் கோமாளி: எளிதல்ல அரசியல் சினிமா!


நாட்டுப்புறப் பாடல் பேழைகளை வெளியிடும் ராம்ஜி இசை நிறுவனம் சாதாரண மக்களின் இசையார்வத்தைப் பூர்த்தி செய்வதில் பலரால் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள ஒரு பிரபலமான நிறுவனம் ஆகும். இதன் நிறுவனர் ராம்ஜி எஸ்.பாலன் மற்றும் அவரது நண்பர்கள் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கும் திரைப்படம் நாகரீகக் கோமாளி.


மதுரையில் கோமாளி எனும் கேபிள் டி.வியை ஒரு இளைஞன் சில நண்பர்களுடன் நடத்தி வருகிறான். அந்த இளைஞர்கள் பிரபல தொலைக்காட்சி சானல்களின் அக்கப்போர் நிகழ்ச்சிகளான பெப்சி உங்கள் சாய்ஸ், சினிமா பார்த்து விட்டு வரும் ரசிகர்களின் விமர்சனம், டயல் எ சாங், கேண்டிட் கேமரா, காமடி டைம் இன்னபிறவற்றை அப்படியே பிரதியெடுத்து தங்கள் உள்ளூர் சேனலை நடத்தி வருகிறார்கள். நாட்டு நடப்பு ஏதுமறியாத, சமூக அக்கறை ஏதுமற்ற அவர்களது ஜாலியான வாழ்க்கையில் ஒரு பெண் கோபத்துடன் குறுக்கிடுகிறாள். மக்களைக் கேலிக்கூத்தான பிறவிகளாகக் கருதும் அவர்களது வேடிக்கையான மேட்டிமைத்தனத்தைக் குத்திக் காட்டும் அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து அவள் யாரென்று தெரிந்து கொள்கிறான் அந்த கேபிள் டி.வி. இளைஞன்.


அந்தப் பெண் பிழைப்பதற்காகத் தன் தந்தையுடன் தஞ்சையிலிருந்து மதுரைக்கு வந்தவள். அவள் தந்தை உலகமயமாக்கத்தால் சூறையாடப்பட்ட விவசாயிகளில் ஒருவர். ஊரில் கடன் வாங்கி விவசாயம் செய்ய முடியாமல் நசித்துப் போனவர். வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் பட்டினியுடன் வாடும் அந்தக் குடும்பம் எலிக்கறியைத் தின்று வாழ முயல்கிறது. இறுதியில் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறது. அதில் தந்தை, மகளைத் தவிர மற்றவர்கள் மரித்துப் போகிறார்கள். மரணத்தைத் தழுவ முடியாமல் மீண்டு வந்த அப்பாவும், மகளும் மதுரைக்கு வருகிறார்கள்.


தன் சொந்த வாழ்க்கையைத் துயரமாக்கிய விசயங்களை அரசியல் ரீதியாக உலகவங்கி, அமெரிக்கா, தனியார்மயம், தாராளமயம் முதலியனவற்றின் கேடுகளைத் தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம், தன் தெருவில், தன் கல்லூரியில் அந்தப் பெண் பேசுகிறாள், பாடுகிறாள், பிரச்சாரம் செய்கிறாள், பிரசுரம் கொடுக்கிறாள். மேலும் கந்துவட்டிக் கொடுமை செய்யும் சிலரை, அவர்களுக்குத் தெரியாமல் ஏதோ ஒரு ஊசி போட்டு கோமா நிலையில் விழ வைக்கிறாள். கடைசியில் போலீசு அவளைக் கைது செய்ய, நீதிமன்றத்தில் ஆவேசமான அரசியல் உரை நிகழ்த்துகிறாள். கடைசிக் காட்சியில் பிணையில் வெளியே வருகிறாள். இடையில் அந்தக் கேபிள் டி.வி. இளைஞனையும் மக்களை நல்வழிப்படுத்தும் நிகழ்ச்சிகளை எடுக்குமாறு வற்புறுத்துகிறாள். அந்தப் பெண் மீது காதல் வயப்படும் அவன் இறுதியில் அவள் விரும்பியவாறு மாறுகிறான். உபயோகமான நிகழ்ச்சிகளை எடுக்க ஆரம்பிக்கிறான். இதனால் பதட்டமடையும் அரசாங்கம் அவனது டி.வியை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் மூலமாக உத்தரவு போடுகிறது. இறுதியில் அந்தப் பெண்ணும், அந்த இளைஞனும் தமது கருத்துக்களைப் பரப்ப நாகரீகக் கோமாளி எனும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்துகிறார்கள்.
இயக்குநர் விரும்பி உருவாக்கியிருக்கும் இந்தக் கதை திரைக்கதையினூடாக அழுத்தமாக, கோர்வையாக, விறுவிறுப்பாக உருவாக்கப்படவில்லை. தனித்தனிக் காட்சிகளில் எப்படி பெரிய தொலைக்காட்சிகளின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகள் செட்டப் செய்து எடுக்கப்படுகின்றன என்பதைக் கண்டு சிரிக்கிறோம். தமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக அமெரிக்கா, உலகமயம், உலகவங்கியின் ஆதிக்கம் குறித்த உரையாடல்களைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறோம். பெரும் முதலீட்டில் எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தில் தன் கதையீனூடாக உலகமயமாக்கத்தின் அரசியல் கேடுகளை மையமாகச் சொல்ல முனைந்திருக்கும் இயக்குநரின் சமூக உணர்வும், நேர்மையும் உண்மையில் மிகவும் பாராட்டிற்குரியது; எளிதில் காணக்கிடைக்காதது. அதேசமயம் இந்த நோக்கம் கதையை அமைத்த விதத்திலும் சரி, சொல்லப்பட்ட விதத்திலும் சரி நிறைவேறவில்லை என்பதை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.


கந்து வட்டிக் கொடுமையில் அல்லலுறும் மக்களிடம், நமது நாடும் இப்படித்தான் உலகவங்கியிடம் கடன் வாங்கிச் சிரமப்படுகிறது என்று ஒரு உவமையாகச் சொல்லலாம். என்றாலும், கந்து வட்டிக் கொடூரத்தைத் தமது சொந்த அனுபவத்திலும் உணர்விலும் புரிந்து கொள்ளும் மக்கள் உலகவங்கியின் அடக்குமுறையையும் அவ்வாறே புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. ஏனெனில் உலகவங்கியின் ஆதிக்கம் பன்முகம் கொண்டது என்பதோடு அது பல தளங்களிலும் விரிந்து செல்கிறது. படத்தில் உலகமய அரசியலின் கேடுகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே பிரச்சாரம் செய்யப்படுகிறது. வாழ்க்கையிலிருந்து அவை உணர்த்தப்படவில்லை. அதனால் பார்வையாளர்கள் படத்தில் பல நல்ல சமூக விசயங்கள் இருப்பதாக மேலோட்டமாக அங்கீகரித்துக் கொண்டாலும் அவை என்னவென்று உணராமலேயே திரையரங்கை விட்டு அகலுகிறார்கள். அப்படியென்றால் தாராளமயமாக்கத்தின் அவலத்தை ஒரு திரைப்படத்தின் மூலம் சொல்லவே முடியாதா?
முடியும். அமெரிக்காவும், உலகவங்கியும், பன்னாட்டு நிதி நிறுவனமும், எப்படி மக்கள் வாழ்க்கையை கண்ணுக்குத் தெரியாமல் வெறிகொண்டு அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை மக்கள் உணரச் செய்ய வேண்டுமானால் அதற்கு தத்துவ நோக்கும், வாழ்க்கை அனுபவமும், அரசியல் கூர்மையும், அதையே கதையாக, கலையாக, திரைப்படமாக எடுத்தியம்பும் ஆற்றலும் வேண்டும். இது மிகக் கடினமான பணி. இன்றையச் சூழலில் ஒரு நபர் தமிழ்வழிக் கல்விப் பள்ளியை இலட்சிய நோக்கோடு ஆரம்பித்து, இறுதியில் வேறு வழியின்றி அந்தப் பள்ளியை இழுத்து மூடுகிறார் என்ற ஒரு வரிச் செய்தியில் கூட உலகமயம் குறித்து அற்புதமான ஒரு கதை இருக்கிறது.


அறிவு வளர்ச்சிக்கும் தாய்மொழிவழிக் கல்விக்கும் உள்ள உறவு, பெற்றோர்களிடம் நிலவும் பொருளற்ற ஆங்கில மோகம், இன்றைய நடைமுறைத் தமிழ் தமிங்கிலமாக மாறியிருக்கும் அவலம், இந்திய வெப்பநிலைக்குப் பொருத்தமற்ற டை, ஷý நடை உடை பாவனைகள், உள்ளத்தால் ஆங்கிலேயராக மாற்றும் மெக்காலே கல்வி முறை, ரெயின் ரெயின் கோ அவே என்று மழையை விரட்டும் நமது வாழ்க்கை முறைக்கு அந்நியமான ஆங்கில மழலைப்பாடல்கள், தாமிரபரணி தெரியாது தேம்ஸ் நதி தெரியும், பகத்சிங் தெரியாது ஸ்பைடர் மேன் தெரியும், வ.உ.சி. தெரியாது, ஜார்ஜ் புஷ் தெரியும், சிவகாசி குழந்தைத் தொழிலாளர்கள் உலகம் தெரியாது வால்ட் டிஸ்னியின் டிஸ்னி லேண்ட் தெரியும், கோக், பெப்சி தெரியும் நீராகாரமும் மோரும் கம்பங்கூழும் தெரியாது. தெருவில் மானாவாரியாக முளைத்திருக்கும் செடி கொடிகளின் ஐந்து பெயர்கள் கூடத் தெரியாது. கட்அவுட் முதல் நோட்டுப் புத்தகத்தின் அட்டை வரை துருத்தி நிற்கும் சினிமா நாயகர்களின் உருவம் மனப்பாடமாய் தெரியும், தன்னைச் சுற்றியிருக்கும் உண்மையான சமூக வாழ்வும், தமிழகமும், இந்தியாவும் தெரியாது தொலைக்காட்சிகள் வடிவமைத்திருக்கும் பொய்யான இந்தியா மட்டும் தெரியும்...


இப்படி பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் சிறார்களின் உலகத்தைத் தீர்மானிக்கும் இன்றையப் பண்பாட்டுச் சூழல், பள்ளிகளின் அங்கீகாரத்தைத் தீர்மானிக்கும் அரசுக் கல்வித் துறையின் ஊழல், சுயநிதிக் கல்வி என்ற பெயரில் இலாபகரமாக வணிகம் செய்யும் அரசியல்வாதிகள் முதலாளிகள், ரிகார்டு டான்சாக மாறிவரும் பள்ளி ஆண்டு விழாக்கள்... இப்படி இந்தக் கதையில் மட்டுமே சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. இது போல ஒரு விவசாயியின் வாழ்க்கை குறித்தும், கிராமத்தை விட்டு நகரத்தை நோக்கி ஓடி உதிரிப்பாட்டாளியாகச் சிதைந்து போகும் அவன் வாழ்க்கை அவலம் குறித்தும் உலகமயமாக்கத்தின் பின்னணியில் நல்ல கதைகளைச் சொல்ல முடியும்.


ஏன், இயக்குநர் எடுத்திருக்கும் இந்த கேபிள் டிவி இளைஞனின் கதை கூட உலகமயமாக்கத்தின் அநீதியை பண்பாட்டு ரீதியில் ஆழமாக உணர வைப்பதற்குச் சாத்தியமுள்ள நல்ல கதைதான். படத்தின் முதல் பாதியில் அந்த இளைஞனின் வேலையினூடாக தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் மக்களின் வாழ்க்கையை நகைக்கத்தக்க விதத்தில் உணர்த்திவிட்டு மறுபாதியில் அந்த இளைஞன் உண்மையான மக்களுக்குத் தேவையான நிகழ்ச்சிகளை எடுக்க முயல்வதாகவும் யாருக்கும் பயனற்ற கோமாளியாக ஆரம்பிக்கும் அவன் வாழ்க்கை மெல்ல மெல்லப் பரிணமித்து சமூகப் பொறுப்புள்ள வாழ்க்கையாக மாறுவதாகவும் சித்தரிக்க முடியும்.


கொடியங்குளம் கலவரம், குமரி மாவட்ட இந்துமதவெறியர்களின் கலவரம், தாமிரவருணி கோக் ஆக்கிரமிப்பு, அரசியல்வாதிகள் சினிமா நட்சத்திரங்களுடன் உண்மையான பேட்டி என்று ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். இதிலிருந்து அரசியல், சமூகம், மீடியா, சாதி, மதம், ஸ்பான்சர் வழிமுறைகள் போன்றவற்றின் பின்புலத்தை அவன் புரிந்து கொள்வான். அவை மக்கள் நலனிலிருந்து முரண்படுவதையும் உணர்வான். இத்தகைய முயற்சிகளிலிருந்து உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் அவனது நோக்கம் நிச்சயம் தோற்றுத்தான் போகும்; ஆனால் படம் பார்ப்பவர்களிடம் உலகமயம் உருவாக்கிவரும் நச்சுப்பண்பாட்டுச் சூழலை அதற்குரிய அரசியல் வார்த்தைகள் இல்லாமல் வாழ்க்கையின் மூலமே உணரவைத்துச் சிந்திக்க வைக்கும் நோக்கத்தில் நாம் வெற்றியடைய இயலும்.
நாம் மக்களிடம் உருவாக்க விரும்பும் கண்ணோட்டம் அல்லது சொல்ல விரும்பும் செய்தி, திரைக்கதை என்ற வாகனத்தில் ஏற்றப்படும் சுமையாக மாறிவிடக் கூடாது. ஒருவேளை திரைக்கதையுடன் இயைந்த முறையில் நமது கருத்து சொல்லப்படுவதாக இருந்தாலும் கூட, அந்தக் கதையானது குறிப்பிட்ட பிரச்சினையில் மக்கள் கொண்டிருக்கும் புரிதலையும் கண்ணோட்டத்தையும் கவனமாகக் கணக்கில் கொள்ளவேண்டும். இல்லையேல், இந்தப் படத்தின் கதாநாயகன் சொல்வதைப் போல, ""அவ என்னமோ சீரியஸா சொல்றாடா, நமக்குத்தான் ஒண்ணும் புரியல'' என்ற நிலை பார்வையாளர்களுக்கும் ஏற்பட்டுவிடும்.


இது இத்திரைப்படத்திற்குச் சொல்லப்படும் விமரிசனம் மட்டுமல்ல, சமூக மாற்றம் குறித்த உண்மையான அக்கறை கொண்ட படைப்பாளிகள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். தனது அரசியல் சமூக உணர்வில் நேர்மையைக் கொண்டிருக்கும் இயக்குநர் இந்த விமரிசனங்களைப் பரிசிலிப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.
அடிப்படையில் தான் ஒரு புரட்சிக்காரன் என்றும் வணிகச் சினிமாவின் நிர்ப்பந்தங்கள் காரணமாகத்தான் சில சமரசங்கள் செய்ய நேர்ந்து விடுகிறது என்றும் தங்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் போலிகள் நிறைந்த தமிழ்த் திரையுலகில், தான் சொல்ல விரும்பிய அரசியல் கருத்தை வணிக சமரசங்களுக்கு இடம் கொடுக்காமல் சொல்ல முனைந்திருக்கும் இயக்குநரின் நேர்மை பாராட்டத்தக்கது.


இந்தத் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் சென்னைத் திரையரங்கு ஒன்றில் நாயகனாக நடித்திருக்கும் ஜெய் சக்தி எனும் அறிமுக நடிகருக்கு அதற்குள் அகில இந்திய ரசிகர் மன்றம் துவக்கப்பட்ட சுவரொட்டிகள் நிறைய ஒட்டப்பட்டிருந்தன. சினிமாவின் அரசியல் இவ்வளவு மலிவாக இருக்கும் போது மக்களுக்கான அரசியலை வணிகச் சினிமாவின் வழியே சொல்ல முடியுமா என்ற கேள்வியையும் இயக்குநர் பரிசீலிக்க வேண்டும்.
.
மு அஜித்
--------------------
புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2006

ரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி!

அரசியல் என்றால் என்னவென்று நேர்மறையில் விளக்குவதை விட எதிலெல்லாம் அரசியல் ஒளிந்து கொண்டு என்னவாக இருக்கிறது என்று விளக்குவது சிரமமானது. அதுவே ஒரு சினிமா எனும் போது காட்சிக் கலையின் உணர்ச்சி வெள்ளத்தில் பார்வையாளர்கள் கட்டுண்டே இருக்க முடியும் என்பதால் கூரிய விமரிசனப் பார்வையை ஏற்படுத்தும் முயற்சி இன்னும் கடினமாக மாறிவிடுகிறது.


சினிமா ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி பொழுதைப் போக்குவது என்றால் என்பதன் பொருளே அது சினிமாதான் என்று மாறியிருக்கும்போது ஒரு திரைப்படத்தைக் கருத்தியல் தளத்தில் நின்று பார்ப்பது, சிந்திப்பது, விவாதிப்பதினூடாகத்தான் காட்சிக் கலையின் உணர்ச்சிக் கவர்ச்சியிலிருந்து நம் சொந்த விழிப்புணர்வு வழியாக விடுதலை பெற முடியும். இல்லையென்றால் அந்த அபினின் போதையில் நம்மிடம் கருக்கொண்டிருக்கும் முற்போக்கான அரசியல் பாதை நம்மையறியாமலே குழப்பமடையக் கூடும். அப்படித்தான் சாதாரண மக்களிடம் பல்வேறு ஆளும் வர்க்க அரசியல் கருத்துக்கள் குடியேறுகின்றன. இந்தக் குடியேற்றத்துக்கு இந்தி பேசும் மாநிலங்களில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரங் தே பஸந்தி இந்தித் திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு.


தற்போதைய சினிமா ஃபார்முலாவின் படி விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்ட இந்தப் படத்தைப் பார்க்க இயலாத வாசகர்களுக்காக கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.லண்டனில் இருக்கும் ஓர் ஆங்கிலேயப் பெண் இந்தியாவில் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய புரட்சிகர வீரர்களான சந்திரசேகர ஆசாத், பகத்சிங், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் முதலானவர்களின் வரலாற்றில் ஆர்வம் கொள்கிறாள். அவர்களைப் பற்றி அவள் எடுக்க விரும்பும் ஆவணப்படம் மிகுந்த செலவு பிடிக்கும் என்பதால் அவள் வேலை பார்க்கும் என்.ஆர்.ஐ. இந்தியர்களை இயக்குநர்களாகக் கொண்ட நிறுவனம் மறுத்து விடுகிறது. இதனால் தன் சொந்த முயற்சியில் படமெடுப்பதற்கு இந்தியா கிளம்புகிறாள்.


புதுதில்லியில் இறங்குபவளை வரவேற்கும் ஒரு இந்தியத் தோழியின் உதவியோடு தன் ஆவணப்படத்தில் நடிக்க வைப்பதற்கு பல கல்லூரி மாணவர்களைச் சந்திக்கிறாள். ஆசாத், பகத்சிங் உரையாடல்களைப் பேசத் திணறும் அந்த நவநாகரீக இளைஞர்களைக் கண்டு சலிப்புக் கொள்கிறாள். சலித்தவளை ஜாலியாக மாற்றுவதற்கு அந்த இந்தியத் தோழி தன்னுடைய நண்பர் வட்டத்தை அறிமுகம் செய்கிறாள்.


ஆமிர்கானின் அந்த நண்பர் வட்டம் வண்ணமயமானது. இந்து, முசுலீம், சீக்கியர், ஓவியர், அதிவேகமாக பைக் ஓட்டுபவர்கள், பீரைக் குடித்தவாறே பனைமர உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிப்பவர்கள், இப்படிப் பல அடையாளங்களோடு ஆட்டமும், பாட்டமுமாய் நாளைக் கழிப்பவர்கள். தோழியின் காதலனான மாதவன் இந்திய விமானப்படையில் பைலட்டாகப் பணியாற்றுபவர். அவரும் இந்தக் கும்மாளத்தில் அவ்வப்போது பங்கு பெறுபவர்.


இந்த நண்பர் வட்டத்தின் இளமைத் துடிப்பில் மனதைப் பறி கொடுத்த அந்த வெள்ளைக்காரப் பெண்மணி இவர்கள்தான் தன் படத்தில் நடிப்பதற்குப் பொருத்தமானவர்கள் என்று முடிவு செய்கிறாள். இந்த நண்பர் வட்டத்திற்கு பாரதப் பண்பாடு குறித்து உபதேசம் செய்து சண்டையிடும் அதுல் குல்கர்னி ஒரு தீவிரமான பாரதீய ஜனதா தொண்டர். அவரையும் தன் படத்தில் நடிக்க வைப்பதற்குத் தேர்வு செய்கிறாள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நண்பர் வட்டத்தினர் பின்னர் ஏற்றுக் கொள்கிறார்கள்.


ஆரம்பத்தில் இந்த ஆவணப்படத்தை தமாசாகக் கருதும் நண்பர்கள் அந்த வெள்ளையினப் பெண்ணின் தீவிரமான அக்கறையை உணர்ந்து வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். நவ ஜவான் பாரத் சபாவின் உறுப்பினர்கள் நெருப்பின் மேல் உறுதிமொழியெடுப்பது, காகோரி ரயில் கொள்ளை, லாலாலஜபதிராய் மீதான தடியடி, அதற்குப் பதிலடியாக ஆங்கிலப் போலீசு அதிகாரியான ஸாண்டர்சைக் கொலை செய்வது, பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசுவது எல்லாம் படமாக்கப்படுகின்றன.
இறுதியில் போராளிகள் தூக்கிலிடப்படும் காட்சிகளைத் திரையில் பார்க்கும் நண்பர்கள் சில கணங்கள் உறைந்து போகிறார்கள். ஒரு மேட்டுக்குடி மது பாரில் அமர்ந்த படி, சீரழிந்து வரும் இன்றைய இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்து விவாதிக்கிறார்கள். பைலட் மாதவன், படித்தவர்கள் இராணுவத்துக்கும், ஐ.ஏ.எஸ்ஸுக்கும், அரசியலுக்கும் வரவேண்டும் என்கிறார். படவேலைகளுக்கு இடையே ஆட்டமும், பாட்டமுமான அவர்களது கொண்டாட்ட வாழ்க்கையும் தொடருகின்றது.


ஆனால் மிக்21 விமானத்தில் பறந்த மாதவன் விபத்தில் இறந்து போக நண்பர்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. விமானப்படையில் பல ஆண்டுகளாகப் பணியிலிருக்கும் ரசியாவின் மிக்21 விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது குறித்துப் புலனாய்வு செய்த என்.டி.டி.வி தொலைக்காட்சி, தரங்குறைந்த மிக் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் இருப்பதாக அறிவிக்கிறது. ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. அமைச்சரவையில் ஊழல் செய்த அந்த மந்திரி விமானம் வாங்கியதில் ஊழல் ஒன்றுமில்லையெனவும், விமானம் விபத்திற்குள்ளானதற்கு பைலட்டின் தவறே காரணம் என்றும் அலட்சியமாகக் கூறுகிறார்.


அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மாணவர்களைத் திரட்டி இந்தியா கேட் எதிரே (குடியரசுத் தின ஊர்வலம் நடக்கும் இடம்) மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியாக ஊர்வலம் நடத்தி தங்களது எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். எரிச்சலடையும் மந்திரி போலீசை விட்டுக் கொடூரமாகத் தடியடித் தாக்குதலை நடத்துகிறார். பலருக்கு மண்டை உடைகிறது. மாதவனின் வயதான அம்மா கோமா நிலைக்குப் போகிறார். இந்தக் காட்சி லஜபதிராயின் தடியடிக்காட்சிகளுடன் மாற்றி மாற்றிக் காண்பிக்கப்படுகிறது.
ஆத்திரமடைந்த நண்பர்கள் முதன்முதலாக அரட்டைக்குப் பதிலாகக் கோபத்துடன் கூடி விவாதிக்கிறார்கள். தாங்கள் ஏற்று நடித்த புரட்சியாளர்களின் வசனங்களை இப்போது நிஜத்தில் பேசுகிறார்கள். இங்கும் ஆசாத்தும், பகத்சிங்கும், பிஸ்மில்லும் மாறி மாறி வந்து பேசுகிறார்கள். எது நிழல் எது நிஜம் என்ற பேதம் தெரியாதபடி விவாதம் நடைபெறுகிறது. இறுதியில் மந்திரியைக் கொல்வது என்று முடிவெடுக்கிறார்கள்.


ஆவணப்படத்தில் இடம் பெறும் சான்டர்ஸ் கொலைக்காட்சியைப் போலவே அதே சூழலில், அதே உத்தியோடு மந்திரி கொலை செய்யப்படுகிறார். தொலைக்காட்சியில் பரபரப்புச் செய்தியாக இடம் பெறும் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் யார் என்று தெரியாத சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ. சதியாக இருக்குமோ என்று அரசியல் உலகில் பேசப்படுகிறது. தங்களது கொலைக்கான நியாயம் இதன் மூலம் மறைக்கப்படுவது கண்டு குமுறும் நண்பர்கள் அதை உலகிற்குச் சொல்லுவதென முடிவெடுக்கிறார்கள். ஒருநாள் அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவைக் கைப்பற்றி நேரடி ஒலிபரப்பில் தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கிறார்கள். தொலைபேசியில் வாழ்த்துக்களுடன் வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்தச் சம்பவம் தலைப்புச் செய்தியாகக் காட்டப்படுகிறது.
இவர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதும் அரசு அதிரடிப்படையை வானொலி நிலையத்திற்கு அனுப்புகிறது. நண்பர்கள் அனைவரும் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆவணப்படத்தில் தாங்கள் தூக்கிலிடப்படும் காட்சிகளை நினைத்தவாறே சிரித்துக்கொண்டே சாகிறார்கள். என்.டி.டி.வியின் காமராக்கள் வழியாக இந்தியா முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதோடு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடு பேசுகிறார்கள். திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகர்கள், வரலாற்றிலிருந்து பகத்சிங்கும், ஆசாத்தும் தங்களுக்குப் பிடித்த விதத்தில் உயிர்த்தெழுந்து வருவதை கைதட்டியவாறே எண்ணி மகிழ்ந்தவாறு மனதில் பாரத்துடன் வெளியேறுகிறார்கள்.
நகர்ப்புற அதிலும் மாநகரப் பார்வையாளர்களைக் குறிவைத்து சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் 600 பிரதிகள் எடுக்கப்பட்டு உலகெங்கும் வெளியிடப்பட்டு முதல் வாரத்திலேயே தயாரிப்புச் செலவை வசூலித்து விட்டதாம். இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன? மாறுபட்ட திரைக்கதை என்பதாலும் இருக்கலாம். அந்த மாறுபாடு என்ன, பார்வையாளர்கள் எதில் ஒன்றினார்கள், இப்படத்தின் உணர்ச்சி தோற்றுவிக்கும் அரசியல் என்ன என்பதைப் பரிசீலிப்பதற்கு முன் சில கொசுறு விசயங்களைப் பார்த்து விடலாம்.
அந்த வெள்ளைக்காரப் பெண் தன் சமகால அரசியல் உணர்வுக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆவணப்படம் எடுக்க அமெரிக்காவும், பிரிட்டனும் ஆக்கிரமித்திருக்கும் இராக்கிற்குத்தான் சென்றிருக்க வேண்டும். சரி போகட்டும், இந்தியாவிற்கு வந்தவள் அந்த நண்பர் வட்டத்துடன் ஆடிப் பாடிப் பழகுபவள் மறந்தும் கூட இராக் மீதான ஆக்கிரமிப்பு குறித்துப் பேசவில்லை.
இதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். இருக்கிறது. படத்திற்கு ஸ்பான்சரே கொக்கோ கோலாதான். படத்தில் நண்பர்கள் சாப்பிட்டவாறே அரட்டையடிக்கும் பஞ்சாப் தாபா காட்சிகள் முழுக்க கோக் விளம்பரங்கள்தான். நடிகர் ஆமிர்கானும் கோக்கின் முக்கியமான விளம்பர நட்சத்திரமாவார். படம் வெளிவந்த தினங்களில் கோக் தனது பாட்டில்களில் ரங் தே பஸந்தி ஸ்டிக்கர் ஒட்டியே விநியோகித்திருக்கிறது. பிளாச்சிமடாவிலும், கங்கைகொண்டானிலும் போராடும் மக்களை ஒடுக்க தனி சாம்ராச்சியமே நடத்திவரும் கோக் இங்கே ஹீரோக்களின் மனம் கவர்ந்த பானமாக இருக்கிறது. 21ஆம் நூற்றாண்டின் இந்திய தேசபக்தியில் கோக்கும் ஒரு அங்கம் என்பது உலகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் ஒரு கள்ள உறவு போலும்.
அடுத்து மிக்21 விமானம் எனும் ரசியவிமானம் வாங்கியதில் ஊழல் என்று வருகிறது. இதுவே எப்16 எனும் தரங்குறைந்த அமெரிக்க விமானம் வாங்கியதில் ஊழல் என்று எடுத்திருக்க முடியுமா? அல்லது உண்மையான இராணுவ ஊழல்களான போஃபர்ஸ் பீரங்கி, கார்கில் சவப்பெட்டி ஊழல், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் போன்றவற்றை வைத்து எடுத்திருக்க முடியுமா?
அப்படி எடுத்திருந்தால் அமெரிக்க அடிமைத்தனத்திலும், இந்த ஊழல்களிலும் ஊறித்திளைத்திருக்கும் தற்போதைய காங்கிரசு அரசு, ஆர்.கே.செல்வமணியின் குற்றப்பத்திரிகையை நல்லடக்கம் செய்தது போல இந்தப்படத்தைப் புதைத்திருக்கும். எனவே, ஊழல் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் ஆளுபவர்களின் மனம் நோகாமல் பேசவேண்டும் என்ற விதியை படம் செவ்வனே பின்பற்றியிருக்கிறது.


மகிழ்ச்சியாக வாழும் அந்த நண்பர் வட்டத்தில் சோகத்தைக் கொண்டு வரும் ஒரு ஊழல் மந்திரியை எப்படிப் போட்டுத் தள்ளுவது என்பதை வித்தியாசமாகச் சொல்லவேண்டும் என்று யோசித்திருக்கும் இந்தப் படத்தின் படைப்பாளிகள் அதற்காக மட்டுமே பகத்சிங், ஆசாத் வரலாற்றை வம்படியாய் இழுத்து வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே பகத்சிங்கிற்கு பொட்டு வைத்தும், ஆசாத்துக்குப் பூணூல் போட்டும் இந்து மதவெறியர்கள் செய்யும் அநீதி ஒருபுறம். மறுபுறம் பாராளுமன்றப் பூசை செய்யும் போலி கம்யூனிஸ்ட்டுகள் தங்களால் கனவிலும் செய்யமுடியாத சாகசங்களைச் செய்திருக்கும் பகத்சிங்கை ஆக்ஷன் ஹீரோவாக அணிகளுக்குச் சித்தரிக்கும் அயோக்கியத்தனம். இப்போது இந்தப் படமும் தனது பங்குக்கு பகத்சிங்கை இம்சை செய்கிறது.


ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய மக்களின் வீரமிக்க போராட்டங்களை பலமுறை காட்டிக் கொடுத்தும் கருவறுத்தும் வந்தது காந்தி காங்கிரசு துரோகக் கும்பல். இந்தத் துரோக வரலாற்றுக்கெதிரான குறியீடுதான் பகத்சிங். தனது சிறைக்குறிப்புக்களில் இந்தியாவில் மலர வேண்டிய சோசலிச ஆட்சி குறித்தும், அதற்கு மக்களை அணிதிரட்டிச் செய்யவேண்டிய புரட்சிப் பணி குறித்தும், பரிசீலனை செய்து கனவு காணும் இந்த வரலாற்று நாயகனை பொய்யான சித்தரிப்புக்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. இந்தப் படத்தில் கேளிக்கைகள் செய்வதிலும், மந்திரியைக் கொல்வதிலும் ஈடுபடும் மேட்டுக்குடி இளைஞர்களின் சாகச உணர்வை ஒளிவட்டம் போட்டுக் காண்பிப்பதற்காக பகத்சிங்கும் ஏனைய போராளிகளும் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.


ஆவணப்படம் எடுக்க வந்த அந்தப் பெண் நல்ல நடிகர்கள் வேண்டுமென்றால் புதுதில்லி தேசிய நாடகப் பயிற்சிப் பள்ளிக்குச் சென்றிருந்தால் விசயம் முடிந்திருக்கும். ஆனால் அதில் கதை இருந்திருக்காது. ரசிகர்களும் படத்தில் ஒன்றியிருக்க முடியாது.


பீர் கோக்கைக் குடித்துக் கொண்டு அந்தரத்தில் சாகசம் செய்யும் இந்த இளைஞர்கள், கும்மிருட்டிலும் ஜீப்பையும் பைக்கையும் அதிவேகமாய் ஓட்டும் இந்த இளைஞர்கள், எப்போதும் ஆட்டமும் பாட்டமும் அரட்டையுமாய் இருக்கும் இந்த இளைஞர்கள், ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் நேசிக்கும் இந்த இளைஞர்களின் கூட்டத்தை படம் ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே ரசிகர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்; அங்கீகரிக்கின்றனர்; அந்தக் குழுவில் சேர விரும்புகின்றனர்; அல்லது சேர்ந்து விட்டனர். இத்தகைய துடிப்பான இளைஞர் குழாமில்தான் பார்வையாளர்கள் தங்களைக் காண்கின்றனரே ஒழிய பகத்சிங் முதலான போராளிகளில் அல்ல. இந்த நண்பர் வட்டத்திற்குள் ஆவணப்படத்தின் மூலம் வந்து போவதால்தான் அந்தப் புரட்சி வீரர்களுக்குரிய சிறப்பை ரசிகர்கள் அளிக்கின்றனர்.


தகவல் புரட்சி நடைபெறும் மாநகரங்களில் ஐந்து இலக்கச் சம்பளம் வாங்கும் மேட்டுக்குடி நடுத்தரவர்க்கம் சனி, ஞாயிறு வார விடுமுறைகளில் இப்படித்தான் வாழ்கிறது அல்லது வாழ விரும்புகிறது. சுற்றிலும் சுயநலம் சூழ வாழ்ந்து கொண்டே இன்னும் மேலே செல்வதையே இலட்சியமாகக் கொண்டு நகரும் நிஜ வாழ்க்கையானது திரையில் தன்னை இவ்வாறு அறிந்துணர்வதில் வியப்பில்லை. இந்த வாழ்க்கையைத்தான் சமூகப் பொறுப்புள்ள வாழ்க்கையாக அந்த வர்க்கம் கருதிக் கொள்கிறது.


சுதந்திரப் போராட்ட வீரர்களின் உரைகளைப் பேசி நடிக்கும் அந்த இளைஞர்கள் ஊரைச் சுற்றியவாறு கேலி பேசித் திரியும் தங்களது அற்பவாழ்க்கை குறித்து எள்ளளவேனும் குற்ற உணர்வு அடைவதில்லை. மாறாக, தாங்கள் ஏற்கெனவே நல்லவர்கள் எனவும் தங்களைப் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பது மட்டும் நல்லதல்ல என்று அதையும் மேலோட்டமாக பாரில் அமர்ந்து கொண்டு மது அருந்தியவாறு பேசிக் கொள்கிறார்கள். கோப்பையில் இருக்கும் மது தீர்வதற்குள் மாதவன் இறந்துவிட உடனே மந்திரியைக் கொன்று தியாகியாகிறார்கள்.


அந்த மந்திரிகூட மக்களிடம் செல்வாக்குப் பெற்று அரசியலில் பல படிகளைத் தாண்டி மந்திரியாகி அப்புறம்தான் ஊழல் செய்ய முடியும். ஆனால் இந்த மேட்டுக்குடி இளைஞர்களுக்கு இந்தப் படிநிலைகள் ஏதும் இல்லை. ஒரே அடியில் தலைவர்களாகி விடுகிறார்கள். இந்தப் படத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அரசியல் இதுதான். எள்ளளவும் சமூகப் பொறுப்பற்று வாழும் மேட்டுக்குடி வர்க்கம் சமூகத்துக்குப் பொறுப்பான அரியணையில் தன்னை அமரவைத்து முடிசூட்டாததினால்தான் சமூகம் சீரழிவதாகக் கருதிக் கொள்கிறது.


இந்தக் கருத்துக்களை முதல்வன், அந்நியன் படங்கள் முதல் ஹிந்துப் பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதும் ஓய்வு பெற்ற பார்ப்பன மேல்சாதி அரசு அதிகாரிகள் வரை எங்கும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். படங்களில் கூட நாயகன் வில்லனை அழிப்பதற்கு பல்வேறு காரணங்கள், நியாயங்கள், சம்பவங்கள் சொல்லப்பட்டு கடைசியில்தான் அநீதி ஒழிந்து நீதி வெற்றி பெறும். மேட்டுக்குடி வர்க்கத்திற்கு அந்தப் பொறுமை இருப்பதில்லை. அதனால்தான் அதற்கு ஜனநாயகம் பிடிப்பதில்லை. பாசிசமும், சர்வாதிகாரமும் மேட்டுக்குடி வர்க்கத்திற்குப் பொருந்திவருகிற அரசியல் கோட்பாடுகள். எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் அருண்ஷோரி முதல் துக்ளக் சோ வரை பல அறிவாளிகளைக் கூறலாம். படத்தில் தங்கள் வட்டத்தின் மகிழ்ச்சி குலைந்துபோன ஒரே காரணத்திற்காக மட்டும் உடனே துப்பாக்கி தூக்குகிறார்கள். இல்லையேல் அந்தக் கைகளில் பீர் பாட்டில் மட்டும் இருந்திருக்கும்.


தற்போது தேசியப் பத்திரிக்கைகளில் அடிபடும் ஜெசிகாலால் விவகாரத்தைப் பாருங்கள். மனுசர்மா ஹரியானா காங்கிரசு மந்திரியின் மகன், விகாஷ் யாதவ் உ.பி. தாதா டி.பி. யாதவின் மகன், அமர்தீப் சிங், அலோக் கன்னா இருவரும் கோகோ கோலாவில் மானேஜர்கள்; இந்த நண்பர் வட்டம் 1999இல் ஒரு நள்ளிரவில் மதுவருந்த டாமரின்ட் கோர்ட் எனும் பாருக்கு செல்கிறார்கள். மது பரிமாறும் ஜெசிகா லால் நேரமாகிவிட்டது என்று மறுக்கிறாள். வார்த்தைகள் தடிக்கின்றன. உடனே மனுசர்மா தனது ரிவால்வரால் ஜெசிகாவைச் சுட்டுக் கொல்கிறான்.


சுமார் 100 பேர் முன்னிலையில் நடந்த இந்தப் படுகொலைக்கான வழக்கு ஆறு ஆண்டுகளாய் நடந்து தற்போது குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நண்பர் வட்டத்திற்கும் படத்தில் வரும் அமீர்கானின் நண்பர் வட்டத்திற்கும் என்ன வேறுபாடு? ஒருவேளை இவர்கள் அந்த பாருக்குச் சென்று மது மறுக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? துப்பாக்கி இல்லாமல் போயிருந்தால் வெறும் கைகலப்பில் முடிந்திருக்கும். மனுசர்மாவைக் காப்பாற்ற பெரும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் மட்டுமின்றி சம்பவத்தின் போது உடன் சென்ற நண்பர்களும் பெரும் பிரயத்தனம் செய்திருக்கிறார்கள். இங்கும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கத்தானே செய்கிறார்கள். இந்த நட்புவட்டங்களின் மகிழ்ச்சிகளில் ஒன்றில் மந்திரி குறுக்கிடுகிறான், மற்றொன்றில் மது பரிமாறும் பெண் குறுக்கிடுகிறாள், அவ்வளவுதான் வேறுபாடு.


படத்தில் புரட்சிகரமான டி.வி.யாக வரும் பிரணாய் ராயின் என்.டி.டி.வி. நிஜத்திலும் அப்படிக் காட்டிக் கொள்ள முயலுகிறது. ஜெசிகாவுக்கு ஆதரவாக பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி இந்தியா கேட்டில் அமைதியாக எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். 2 இலட்சம் பேர் என்.டி.டி.விக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்களாம். அதை எடுத்துக் கொண்டு பிரணாய் ராய் அப்துல் கலாமைப் பார்த்து நீதி வேண்டுமென கோரிக்கை வைத்தாராம். இதை அந்த டி.வி. ஏதோ மாபெரும் புரட்சி நடவடிக்கையாக சித்தரித்து நேரடியாக ஒளிபரப்புகிறது.
இதே பிரணாய் ராய் லாவோசில் நடந்த பொருளாதார மாநாட்டில் அனில் அம்பானி உள்ளிட்ட முதலாளிகளோடு ""உலக முதலாளிகளே இந்தியாவிற்குள் முதலீடு செய்ய வாருங்கள்'' என்று டான்ஸ் ஆடியவர். பில் கேட்ஸ் இந்தியாவிற்கு வந்த போது பரம்பொருளைக் கண்ட பரவசத்துடன் பேட்டி எடுத்தவர். புஷ்ஷûக்கு மன்மோகன் சிங் விருந்து அளித்தபோது கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றவர். இப்படிப் பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிமையாக இருக்கும் ஒரு ஜந்து தன்னை ஒரு போராளியாகக் காட்டிக் கொள்வதை என்னவென்று அழைப்பது?


ஜெசிகாவிற்கு நீதி கிடைக்கவில்லை என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பேசுவதிலும் ஒரு நடுத்தர வர்க்க அரசியல் இருக்கிறது. ஜெசிகா லால் ஒரு பெண், அதிலும் ஒரு விளம்பர மாடல். இந்தப் பெண் கொலை செய்யப்பட்ட சோகத்தை மாநகரத்து நடுத்தர வர்க்கத்தின் சோகமாக மாற்றுவதில் ஊடக முதலாளிகளுக்குப் பெரிய பலன் இருக்கிறது. ஜெசிகாவிற்குப் பதில் மதுக்கோப்பை கழுவும் ஒரு பையன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது இந்த அளவுக்குப் பேசப்பட்டிருக்காது.


இந்தப் பத்தாண்டுகளில் பம்பாய்க் கலவரம், குஜராத் கலவரம், மேலவளவுப் படுகொலை, ரன்பீர்சேனா அட்டூழியங்கள் என்று நீதி கிடைக்காத சம்பவங்கள் எத்தனை இருக்கின்றன? அதற்கெல்லாம் என்.டி.டி.வி இயக்கம் எடுக்கவில்லை. குடியரசுத் தலைவரைப் பார்க்கவில்லை. படத்திற்கு கோக் போல ஸ்பான்சர் செய்திருக்கும் அந்த டிவி., திரையில் வரும் காட்சிகளைப் போல நிஜத்தில் காட்டிக் கொள்வதற்கு ஜெசிகாவின் வழக்கு அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. கூடவே இரண்டு இலட்சம் எஸ்.எம்.எஸ். செய்திகள் அனுப்பிய அந்த நடுத்தர வர்க்கமும் தன்னை மாபெரும் சமூகப் போராளியாகக் கருதிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்தக் கோழைகள் எவரும் குறைந்தபட்சம் மனுசர்மாவைத் தூக்கில் போடவேண்டும் என்று கூடக் கேட்கவில்லை.


ஜெசிகா லாலுக்கு நீதி வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களது கோரிக்கை. பொல்லாத நீதி! ஆக இந்தப் படம் ஏன் வெற்றி பெற்றது, பார்வையாளர்கள் எதில் ஒன்றினார்கள் என்பதை ஜெசிகாவின் வழக்கு என்ற உண்மை எடுப்பாக விளக்கி விடுவதால், நாம் தனியாக விளக்குவதற்கு ஒன்றுமில்லை.


மு இளநம்பி
புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2006

Wednesday, December 19, 2007

'குரு' திரைப்பட விமரிசனம்

அம்பானி:
முதலாளிகளின் குரு மோசடிகளின் கரு
*****************************************
நன்றி: தமிழரங்கம்
..
90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப் படமாக்கிய மணிரத்தினம் 2000ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தை முன்னேற்றிய முதலாளித்துவ நாயகர்களை நாடிச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ற மாற்றம்தான். 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் இளைஞர்களிடம் விற்கப்படும் காலத்தில், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும், விப்ரோவின் பிரேம்ஜியும் பொன்முட்டையிடும் வாத்துக்கள் எனப் போற்றப்படும் நேரத்தில் இவர்களுக்கு முன்னோடியான அம்பானியை வெள்ளித்திரையில் நினைவு கூர்கிறார் மணிரத்தினம்.

எனினும் குரு திரைப்படத்தில் அவரது வழக்கமான காதல் சங்கதிகள் இல்லை. பணம் சம்பாதித்து முன்னேறவேண்டும் என்று போதிப்பதற்கு காதல் முதலான சென்டிமென்ட் பீடிகைகள் தேவையில்லையே?
..
இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் நீங்கள் மட்டும் முன்னேறலாம் என்று தூண்டில் போடும் சுயமுன்னேற்ற வெறியைக் கலைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார் மணிரத்தினம். ஆனாலும் சமூகத்தில் கோலோச்சும் இந்த உணர்ச்சி கலையில் வெற்றி பெறவில்லை.
..
ஒரு வண்டிச்சக்கரத்தில் காலம் சுழன்று விஜயகாந்தோ, ரஜினிகாந்தோ மாபெரும் முதலாளிகளாவதை இரசித்துச் சலித்திருக்கும் இரசிகர்கள் அதையே இராஜீவ் மேனனின் லிரில் சோப் ஒளிப்பதிவிலும், ரஹ்மானின் கீ போர்டு அலறல் இசையிலும், மென்று முழுங்கும் மணிரத்தினத்தின் வசனத்திலும் லயிப்பதற்குத் தயாரில்லை. படத்தைப் பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதாலும், பார்க்க வேண்டாம் என்பதாலும் கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.
···
குஜராத்தின் கிராமமொன்றில் பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் குரு (நிஜத்தில் அம்பானி), தந்தையின் விருப்பத்தை மீறி துருக்கி (ஏடன்) நாட்டிற்குச் செல்கிறான். பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் சாதாரணப் பணியாளாய் வேலை செய்கிறான். ஓய்வு நேரத்தில் மல்லிகா ஷெராவத்தின் முக்கால் நிர்வாண நடனத்தை இரசிக்கிறான். கூடவே மூன்று சீட்டு விளையாட்டில் விடாமல் வெல்கிறான். காரணத்தைக் கேட்டால் கவனம் என்கிறான். அடுத்து சூபர்வைசர் பதவிக்கு உயருகிறான். அவனுக்கு டை கூடக் கட்டத் தெரியவில்லை என்று சுட்டிக் காட்டும் வெள்ளையனது பதவி உயர்வுக் கடிதத்தைக் கடாசிவிட்டு இனிமேல் வெள்ளைக்காரனுக்கு உழைப்பதில்லை எனவும் சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெறுவேன் எனவும் கூறி நாடு திரும்புகிறான்.
..
வியாபாரத்தில் தோற்றுப் போவாய் என்று எச்சரிக்கும் தந்தையின் சாபத்தைப் புன்னகையால் மறுக்கிறான். வியாபாரத்துக்குத் தேவையான 15000 ரூபாயை வரதட்சிணையாக வாங்குவதற்காக, தன்னைவிட ஒரு வயது அதிகமென்ற போதிலும் நண்பனின் அக்காவை (கோகிலா பென்) திருமணம் செய்து கொள்கிறான். மச்சான் மற்றும் மனைவியுடன் வியாபாரம் செய்ய நெரிசல் மிகுந்த பம்பாய்க்கு இடம் பெயர்கிறான்.
..
நூல் மார்க்கெட் தரகனாக வணிகம் செய்யத் தொடங்கி மின்னல் வேகத்தில் வளருகிறான். ஜவுளி வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் கான்ட்ராக்டர் (பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா) எனும் முதலாளியின் தடைகளை மீறி தனது சக்தி (ரிலையன்ஸ்) நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறான். இலட்சிய வேட்கை கொண்ட இந்த கிராமத்து இளைஞன் மீது காந்தியவாதியான ஒரு பத்திரிகை அதிபருக்கு (இந்தியன் எக்ஸ்பிரஸ் இராம்நாத் கோயங்கா) அனுதாபம் ஏற்படுகிறது. அதன் பிறகு அவனது தொழில் பிரம்மாண்டமாக வளருகிறது. ஜவுளி தொழிற்சாலை, பாலியஸ்டர் ஆலை, பங்குகள் வெளியீடு, மைதானத்தில் பங்குதாரர் கூட்டம் என்று உச்சத்திற்குப் போகிறான். இடையிடையே மணிரத்தினத்தின் திருப்திக்காக மனைவியைக் கொஞ்சி நடனம் ஆடுகிறான். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான்.
..
இவனது அசுர வளர்ச்சி குறித்து பத்திரிகை அதிபருக்குச் சந்தேகம் வருகிறது. அவனது முறைகேடுகளை அம்பலப்படுத்தி நிர்வாணப்படுத்தப் போவதாக அவர் எச்சரிக்கிறார். ""என்னை நிர்வாணப்படுத்துவதற்கு எல்லோரையும் நிர்வாணப்படுத்த வேண்டும்'' என்று பதிலளிக்கிறான் குரு. பத்திரிக்கை அதிபரின் நிருபர் (அருண்ஷோரி) குருவின் வணிக மோசடிகளை அம்பலப்படுத்துகிறார். குருவோ எல்லா பத்திரிக்கைகளுக்கும் விளம்பரத்தைக் கொடுத்து வாயடைக்க முயல்கிறான். இருப்பினும் இதனால் அவனுக்கு தொழிலில் நெருக்கடி ஏற்படுகிறது. அத்துடன் பக்கவாதத்தில் வேறு விழுகிறான். பத்திரிக்கை அதிபர் வருத்தப்படுகிறார். இறுதியில் அரசாங்கம் சக்தி நிறுவனத்தின் மோசடிகளை ஆராய விசாரணைக் கமிஷன் அமைக்கிறது.
..
""எதுவும் தெரியாத கிராமத்து இளைஞன் தொழில் துவங்க நினைத்தது தவறா, தன்னை முடக்க நினைத்த பரம்பரை முதலாளிகளை வென்று காட்டியது குற்றமா, பல இலட்சம் பங்குதாரர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் தனது தொழில் சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்தது முறைகேடா'' என்று நீதி விசாரணையில் இறுதிக் காட்சியில் விஜயகாந்த் ஸ்டைலில் பொரிந்து தள்ளுகிறான். இவன் தொழிற்துறையின் தாதாவா அல்லது அறிவுஜீவியா என்று வியக்கும் நீதிபதிகள் அவன் மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றைத் தள்ளுபடி செய்து அபராதம் மட்டும் விதிக்கின்றனர். கடைசிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்கள் ஆரவாரம் செய்ய, சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவேன் என்று மைதானத்தில் நின்று சூளுரைக்கி றான் நடுத்தர வயதைக் கடந்துவிட்ட குரு. இத்துடன் படம் முடிகிறது.
..
அம்பானியின் வாழ்க்கையை அட்சரம் பிசகாமல் எடுத்திருக்கும் மணிரத்தினம் இந்தப் படத்தின் மூலம் கூறுவது என்ன? வணிகம் செய்து முன்னேற வேண்டும் என்பதை இரத்தத்தில் வரித்திருக்கும் ஒரு கிராமத்து இளைஞன் ஒரு இலட்சியவாதியைப் போலப் போராடுகிறான். அந்த இலட்சியமே வாழ்க்கை குறித்த அவனது அணுகுமுறை அனைத்தையும் நியாயப்படுத்துகிறது. தடையரண்களாய் வரும் அரசு, சட்டம், ஏனைய முதலாளிகள், அதிகாரவர்க்கம் முதலானவற்றை அவன் தகர்த்துச் செல்கிறான். தொழிற்துறையில் அவன் செய்யும் முறைகேடுகளைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மணிரத்தினம்.
..
குருவை அம்பலப்படுத்தும் பத்திரிக்கை அதிபரும், நிருபரும் ஏதோ பகவத்கீதையின் கர்மவீரர்களைப் போலத்தான் செயல்படுகிறார்கள். குருவுக்கு எதிரான அவர்களது அறப்போராட்டம் மக்கள் நலன் குறித்த அக்கறையிலிருந்து எழவில்லை. பக்கவாதம் வந்து விழுந்தவுடனே குருவின் மீது அவர்கள் பரிதாபம் கொள்கிறார்கள். ""நீ மட்டும் எப்படி ஒரு பெரிய முதலாளியானாய்'' என்பது மட்டுமே அவர்களது கேள்வி. இந்தக் கேள்விக்கான விடைதான் இந்தியத் தொழிற்துறையின் முன்னோடி எனப் போற்றப்படும் அம்பானியின் கதை.
...
1980களில் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியராக இருந்து அம்பானியை அம்பலப்படுத்திய அருண்ஷோரி, 2002இல் அம்பானி மரணமடைந்த போது பின்வருமாறு கூறினார்: ""அம்பானி தகர்க்க வேண்டிய சட்டங்களைத்தான் தகர்த்தெறிந்தார். இன்று அந்த சட்டங்களெல்லாம் காலாவதியாகி தாராளமயம் அமலில் உள்ளது. இதற்காக இந்தியத் தொழிற்துறையே அம்பானிக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது.'' அருண்ஷோரி சுயவிமர்சனம் மட்டும் செய்து கொள்ளவில்லை. பா.ஜ.க. அமைச்சராக இருந்தபோது ஐ.பி.சி.எல். எனப்படும் அரசின் எண்ணெய்க் கம்பெனியை அம்பானியின் ரிலையன்சு நிறுவனத்துக்குச் சொந்தமாக்கி பிராயச்சித்தமும் செய்து கொண்டார்.
..
அருண்ஷோரி, மணிரத்தினம் மட்டுமல்ல ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் கூட இப்படித்தான் அம்பானியைக் கொண்டாடுகின்றன. சுமார் 35 இலட்சம் பங்குதாரர்கள் அம்பானியால் வசதியுடன் வாழ்கிறார்கள், ""அம்பானியைப் போல ஒரு பத்து தொழிலதிபர்கள் இருந்தால் இந்தியா ஒரு பணக்கார நாடாகிவிடும்'' என்று சுயமுன்னேற்ற மதத்தின் குருவாகவே அம்பானி சித்தரிக்கப்படுகிறார். இந்த குருவின் உண்மையான கதை என்ன?···தொழில் முனைவோர்களை வளரவிடாமல் நசுக்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தின் லைசன்ஸ் பெர்மிட் கோட்டா ராச்சியத்தைத் தகர்த்தார், பழம்பெருச்சாளிகளின் கோட்டையாக மோன நிலையில் தேங்கி இருந்த இந்தியத் தொழில்துறையை உடைத்து உள்ளே புகுந்து அதை விறுவிறுப்பானதாக்கினார் என்பதுதான் அம்பானிக்கு மணிரத்தினம் சூட்டும் புகழாரம்.
..
அன்று நேருவின் சோசலிசம் என்று புகழப்பட்டதும், தற்போது லைசன்ஸ், பெர்மிட், கோட்டா ராச்சியம் என்று இகழப்படுவதுமான அந்த கொள்கை, உண்மையில் தேசிய முதலாளிகளைத் தான் நசுக்கியதேயன்றி, டாடா பிர்லா போன்ற தரகு முதலாளிகளையல்ல. அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கையின் ஆதாயங்களை சட்டபூர்வமாகவும் சந்து பொந்துகளில் புகுந்து லஞ்ச ஊழல்களின் மூலமும் அனுபவித்துக் கொண்டே, அவ்வப்போது தம் அதிருப்தியையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர் அன்றைய தரகு முதலாளிகள்.
..
பாரம்பரியத் தரகு முதலாளிகளைவிடத் திறமையாகவும், துணிச்சலாகவும் லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு எந்திரத்தையும் சட்டங்களையும் தனக்கு ஏற்றபடியெல்லாம் வளைத்து, ஊடகங்களை விலைக்கு வாங்கி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டினார் என்பதுதான் அம்பானியின் சாதனை. ரிலையன்சின் வளர்ச்சிக்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டன. ஏற்றுமதி செய்யும் மதிப்புக்கேற்ப இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறையின் கீழ் மண்ணையும், மசாலாப் பொருட்களையும், படத்தில் வருவது போல் காலி அட்டைப் பெட்டிகளையும் ஏற்றுமதி செய்து உள்நாட்டில் கிராக்கியாக இருந்த ரேயான், நைலான், பாலியஸ்டர் செயற்கை இழைகளை இறக்குமதி செய்து பல மடங்கு இலாபம் ஈட்டினார். அம்பானியின் சாரத்துக்கு இந்த ஒரு சோறு முழுப்பதமாகும்.
..
அம்பானியின் ஆலைகளுக்கான இயந்திரங்கள் இறக்குமதி வரி செலுத்தாமல் மோசடி முறையில் கொண்டு வரப்பட்டதை கோயங்கா அம்பலப்படுத்தியதற்குக் காரணம் மணிரத்தினம் சித்தரிப்பது போல சில தனிமனிதர்களுக்கிடையே நடந்த ஈகோ பிரச்சினையோ, கோயங்காவின் அறவுணர்வோ அல்ல. புதிய தரகு முதலாளிகளின் பிரதிநிதியாக வந்த அம்பானியை பழையவர்களின் பிரதிநிதியான நுஸ்லிவாடியா எதிர்த்தார். தரகு முதலாளிகளுக்கிடையான இந்த முரண்பாட்டில் நாட்டு நலனும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை.
..
அவர்களின் இந்த முரண்பாடு அரசியலிலும் பிரதிபலித்தது. அம்பானியை இந்திராவும் ராஜீவும் காங்கிரசும் ஆதரித்தன; வாடியாவை ஜனதா ஆதரித்தது. 1980 தேர்தலை இவ்விரண்டு முதலாளித்துவப் பிரிவினரும்தான் ஸ்பான்சர் செய்தனர். அந்தத் தேர்தலில் இந்திரா வென்றதற்காக அம்பானி விருந்து வைத்துக் கொண்டாடினார். அதன் பிறகு ரிலையன்சின் மோசடிகள் கொடிகட்டிப் பறந்தன. ராஜீவும், பிரணாப் முகர்ஜியும், முரளி தியோராவும் அம்பானியின் தூதர்களாக அரசாங்கத்தில் செயல்பட்டனர். பல சட்டங்கள் ரிலையன்சின் வளர்ச்சிக்காக இயற்றப்பட்டன, மாற்றப்பட்டன, ஒத்தி வைக்கப்பட்டன. ""நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் ரிலையன்சின் அனுமதியைப் பெறும்'' என்று ஒரு பழமொழியே டெல்லிப் பத்திரிக்கையாளர்களிடம் உருவாகியிருந்தது. மேல்மட்டத்து அதிகாரவர்க்கத்தின் பணிநியமன உத்தரவுகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்குள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றன.
..
வி.பி.சிங் பிரதமரானதும் அம்பானியின் மீது விசாரணைக் கமிஷன் நடந்து பல மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அதிலொன்று அமெரிக்காவிற்கு அருகிலிருக்கும் ஒரு தீவிலிருந்து அம்பானியின் பினாமி ஒருவர் முதலீடு செய்து வரிஏய்ப்பு செய்தது. ஃபேர்பாக்ஸ் எனும் அமெரிக்கத் துப்பறியும் நிறுவனம் ரிலையன்சின் அந்நியச் செலாவணி மோசடி குறித்து புலனாய்வு செய்ய நியமிக்கப்பட்டது. ஆயினும் இவற்றினாலெல்லாம் அம்பானியைத் தண்டிக்க முடியவில்லை. ஏனென்றால் இத்தகைய மோசடிகளை எல்லா தரகு முதலாளிகளும்தான் செய்து வந்தனர். அம்பானியோ அதில் பழம் தின்று கொட்டை போட்டார்.
..
எனவே, ஒரு கட்டத்துக்கு மேல் அம்பானி குறித்த விசாரணை செல்ல முடியவில்லை. கிணறு வெட்ட பூதம் கிளம்பும் என்பதால் மேலோட்டமாகத் தோண்டப்பட்ட கிணறு அவசர அவசரமாக மூடப்பட்டது. அம்பானியின் மீதான விசாரணைகள் நியாயமானவைதான் என்று விசாரிப்பதற்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய விசாரணைக் கமிஷனொன்று நியமிக்கப்பட்டது. இந்த நீதிபதிகளும் அம்பானியின் மீதான புலனாய்வு, நாட்டு நலனுக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவை என்று தீர்ப்பளித்தனர்.
..
இரண்டு தரகு முதலாளித்துவக் கும்பல்களிடையேயான மோதல், தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டு மொத்த நலன் கருதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதுவே நாட்டுநலன் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகென்ன, நாட்டுப் பற்றுக்கு புதிய இலக்கணம் கண்ட அம்பானி இதன்பிறகு மாபெரும் ஏகபோக முதலாளியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அம்பானியின் பிரதிநிதிகள் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும் இருந்தனர். முலாயம் சிங் யாதவ், அமர்சிங், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, பிரணாப் முகர்ஜி, முரளிதியோரா, முரளி மனோகர் ஜோஷி, அருண்ஜெட்லி, சந்திரபாபு நாயுடு, மோடி, கடைசியாக தயாநிதி மாறன் வரை இந்தப் பட்டியலில் பலர் உள்ளனர்.
..
நூல், ஜவுளி விற்பனையிலிருந்து ஜவுளி ஆலை, பாலியஸ்டரில் ஏகபோக ஆலை, அதன் மூலப்பொருள் ஆலை. அதன் மூலப்பொருளான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, தற்போது செல்பேசி சேவை, தகவல் தொழில்நுட்பத் துறை, நிதிக் காப்பீடு நிறுவனங்கள் என ஆக்டோபஸ் போல நாட்டையே கவ்வியிருக்கிறது அம்பானியின் சாம்ராச்சியம். எல்லாவற்றிலும் கால் பதித்திருக்கும் அம்பானி தான் முதலாளியாக உருவெடுத்த பின்னராவது தனது மோசடி முறைகளை மாற்றிக் கொண்டாரா? இல்லை முன்பை விட அதிகமாகவே செய்தார். முன்னர் பல தடையரண்களுடன் செய்ததை இப்போது சுதந்திரமாகச் செய்தார்.
..
தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் பத்தாம்பசலிச் சட்டங்கள் என்ற கூட்டை உடைத்துப் பிறந்த இலட்சிய வேட்கை கொண்ட சுதந்திரப் பறவையாக அம்பானியை மணிரத்தினம் சித்தரித்திருப்பது அப்பட்டமான பித்தலாட்டமாகும். முதலாளித்துவத்துக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டால், அது சட்டபூர்வமான வழிகளிலும், நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டும் தனது சுரண்டலை நடத்தும் என்ற கருத்தே மோசடியானது. அத்தகைய சுதந்திரம் வழங்கப்படாததால்தான் அம்பானி சட்டத்தை மீற நேர்ந்தது என்று இந்தக் கிரிமினலுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் மணிரத்தினம்.
..
90களில் தாராளமயக் கொள்கைகள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய பின்னரும் என்ன நடந்தது? வில்போன் சேவைக்கு மட்டும் லைசன்சு பெற்ற ரிலையன்சு செல்போன் சேவையை முறைகேடாக அளித்து பல கோடி ரூபாய் கட்டண மோசடி செய்தது. இது அம்பலமானதும் அம்பானிக்குத் தகுந்தபடி சட்டத்தை மாற்றியது பா.ஜ.க. அரசு. அடுத்து வெளிநாடு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி சுமார் 1300 கோடி ரூபாய் பகற்கொள்ளை அடித்தது ரிலையன்ஸ். தேசத்துரோகம், மோசடி போன்ற கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டன. சில கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதித்து வழக்கை முடித்துக் கொண்டது காங்கிரஸ் அரசாங்கம். ரிலையன்சின் நிறுவனங்கள் அனைத்தும் கொள்ளையில் பழுத்த புழுக்கள். இந்தக் கொள்ளையனைத்தான் இந்தியத் தொழில்துறையின் குரு என்கிறார் மணிரத்தினம்.
..
திரைப்படத்தில் ரிலையன்சின் பங்குதாரர்கள் ஏதோ ஒரு மக்கள் திரள் இயக்கம் போல சித்தரிக்கப்படுகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் நடந்து கொண்டிருந்த பங்குதாரர்கள் கூட்டத்தை திறந்தவெளி மைதானத்தில் நடத்தியவர், இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரைப் பங்குச்சந்தையை நோக்கிக் கவர்ந்திழுத்தவர் என்பவை நிஜத்திலும் அம்பானிக்குச் செலுத்தப்படும் புகழாரங்கள்.
..
இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை நாட்டின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தவர் அம்பானி என்பது போன்ற தோற்றம் இதன்மூலம் உருவாக்கப்படுகிறது. இலட்சக்கணக்கான சூதாடிகளை அம்பானி உருவாக்கினார் என்பதே உண்மை. பங்குச் சந்தையைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவரை இந்த உண்மையையும் புரிந்து கொள்ள இயலாது.பங்குச் சந்தை வர்த்தகம் என்பதற்கும் நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதன் இலக்கணமே சூதாட்டம்தான். புளூ சிப் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் 10, 15 பெரிய நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படும் மதிப்பை வைத்துத்தான் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் தீர்மானிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தில் பலர் ஏமாறுவார்கள், சிலர் இலாபம் சம்பாதிப்பார்கள். பங்குகளின் முகமதிப்பு 10 ரூபாய் என்றால், அதன் சந்தை மதிப்பு 500 அல்லது 1000 ரூபாயாகக் கூட இருக்கும். இந்த விலை உயர்வை பன்னாட்டு நிதி நிறுவனங்களும், பங்குச் சந்தைத் தரகர்களும் செயற்கையான முறையில் உருவாக்குகின்றனர். பங்குகளுக்கான டிவிடெண்ட் எனப்படும் லாப ஈவுத் தொகை பங்கின் முகமதிப்பை வைத்தே வழங்கப்படுமேயன்றி அதன் சந்தை மதிப்பை வைத்து அல்ல.
..
இந்நிலையில், சிறுமுதலீட்டாளர் எனப்படும் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதில் கிடைக்கும் வருடாந்திர ஈவுத் தொகையால் ஒரு போதும் இலாபம் சம்பாதிக்க முடியாது. மாறாக, அந்த பங்கின் சந்தை மதிப்பு பலமடங்கு உயரும் போது அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதுதான் பங்குச் சந்தையின் கவர்ச்சி. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்குக் கிடைக்கக்கூடிய இந்த இலாபம் என்பது இன்னொரு பிரிவினரின் நட்டம். திரைப்படத்தில் மூன்று மகள்களின் திருமணத்தை ரிலையன்சின் பங்குகளை விற்றுத்தான் நடத்தினேன் என்று கூறி ஒருவர் அம்பானிக்காக உருகுகிறார். தோற்றுப்போன வேறொரு சூதாடியின் 3 மகள்கள் முதிர்கன்னிகளாக மறுகிக் கொண்டிருப்பார்கள் என்பதே இதன் பொருள்.
..
பங்குகளின் மதிப்பு ஏன் உயர்கிறது, ஏன் சரிகிறது என்று தெரியாமல் நடுத்தர வர்க்கம் தத்தளித்துக் கொண்டிருக்க, இந்த உயர்வையும் சரிவையும் திரைமறைவில் இருந்து ஆட்டிவைக்கும் அம்பானிகளும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் ஒவ்வொரு உயர்விலும் ஒவ்வொரு சரிவிலும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொள்வார்கள். இந்த நரவேட்டையில் இவர்களோடு சேர்ந்து சில எலும்புகளைக் கடிக்கும் வாய்ப்புப் பெற்ற நபர்கள்தான் ""ஐயா உங்கள் அருளால்தான் 3 பெண்களுக்குக் கல்யாணம் செய்தேன்'' என்று அம்பானியிடம் உருகுவார்கள்.
70, 80களில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குகளை வெளியிட்டபோது அது அவரது மாநிலமான குஜராத்தில் பெரு வெற்றி பெற்றது. இன்றைக்கும் ரிலையன்சின் பங்குதாரர்களில் பெரும்பான்மையினர் குஜராத்தைச் சார்ந்த பனியாக்களே. இந்தச் சூதாடி வர்க்கம்தான் இந்துத்துவ வெறி எனும் அரசியல் ஒழுக்கக் கேட்டிலும் முன்னணியிலிருக்கிறது என்பதையும் வாசகர்கள் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
..
நாடா குத்துபவன் போல தனது பினாமி கம்பெனிகள் மூலம் ரிலையன்ஸ் பங்குகளைத் தானே வாங்கினார் அம்பானி. பங்குகளின் விலையை செயற்கையாக உயரச் செய்தார். விலை குறையும்போது தானே தனது பங்குகளை வாங்கி விலை சரியாமல் இருத்தவும் செய்தார். பணம் தேவைப்பட்ட போது, கடன் பத்திரங்களை வெளியிட்டார். கடன் பத்திரங்களுக்கு சட்டப்படி வட்டி கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் பங்குகளுக்கு ஈவுத்தொகை கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அரசியல் செல்வாக்கால் கடன் பத்திரங்களையே பங்குகளாக மாற்றிக் கொண்டார். ஆண்டுதோறும் வட்டி கிடைக்கும் என்று நம்பி கடன் பத்திரங்களை வாங்கிய நடுத்தரவர்க்கத்திற்குப் பட்டை நாமம் போட்டார்.
..
இத்தனையும் செய்து விட்டு, சாவதற்கு முன்பு ஒரு தத்துவத்தையும் சொன்னார் அம்பானி: ""ரிலையன்சை நான் உருவாக்கினேன் என்பது உண்மைதான். அம்பானிகள் வரலாம், போகலாம். ஆனால் ரிலையன்சின் பங்குதாரர்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்'' என்றார். ஆனால் அம்பானி செத்த இரண்டே வருடங்களுக்குள் அவரது மகன்கள் அம்பானியின் இந்த மரண வாக்குமூலமும் பொய்யே என்பதை நிரூபித்து விட்டார்கள்.
..
ரிலையன்சின் 52% பங்குகள் பொதுமக்கள் வசம் இருப்பதாகவும், 43% பங்குகளை பன்னாட்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள 5 சதவீத பங்குகள்தான் தங்கள் வசம் இருப்பதாகவும் அம்பானி குடும்பத்தினர் புளுகி வந்தனர். புத்திரர்களின் சொத்துச் சண்டையில் இந்தப் புளுகுணியாட்டமும் வெட்டவெளிச்சமானது. பொதுமக்களது கையில் இருக்கும் பங்குகள் உண்மையில் 13 சதவீதம் மட்டுமே. மீத 39 சதவீதம் அம்பானியின் பினாமி நிறுவனங்களிடம் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 500ஐத் தாண்டும்.
..
மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தில் பிரம்மாண்டமான கணினியொன்று செயற்கையான காட்சி உலகை உருவாக்கி எது மெய் எது பொய் என்று அறிய முடியாத குழப்பத்தை உருவாக்குவது போல, அடியையும் நுனியையும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் இந்த பினாமி கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார் அம்பானி. முதலீட்டாளர்களையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த கிரிமினல் குற்றம், வாரிசுச் சண்டையில் அம்பலமாகி நாறியது.
..
எனினும், ரிலையன்ஸ் குடும்ப பிரச்சினையில் அரசு தலையிடாது என ப.சிதம்பரமும், ஏனைய மத்திய அமைச்சர்களும் அறிவித்தனர். இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள், அம்பானி வளர்த்த சாம்ராஜ்ஜியம் இப்படி அழியலாமா என்று சோக கீதம் இசைத்தனரேயொழிய யாரும் அம்பானி குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதவில்லை, அவர்களால் சூறையாடப்பட்ட சிறுமுதலீட்டாளர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தக் கூட இல்லை.""நாம் இந்தியாவிலேயே முதல் கம்பெனியானால் போதுமா, உலகத்திலேயே முதல் கம்பெனி ஆகவேண்டாமா'' என்று பங்குதாரர்கள் கூட்டத்தில் குரு முழங்கும் காட்சியுடன் படம் முடிகிறது.
..
அன்று குருவின் மோசடிகள் என்று கூறப்பட்டவை அனைத்தும் இன்று சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. நடுத்தரவர்க்கத்துக்குப் பேராசை காட்டி பங்குச் சந்தைச் சூதாட்டத்தை நோக்கி அன்று அம்பானி கவர்ந்திழுத்தார் என்றால் இன்று ப.சிதம்பரம், நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகளைப் பங்குச் சந்தையை நோக்கி நெட்டித் தள்ளுகிறார்.
..
வங்கிகளின் வைப்புநிதி, தபால் சேமிப்பு, அரசின் கடன் பத்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்து, நடுத்தரவர்க்கம் தனது சேமிப்பை பங்குச் சந்தையில்தான் போடவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார் சிதம்பரம். இதுவும் போதாதென்று தற்போது தொழிலாளர்களின் சேமநல நிதி மூன்று இலட்சம் கோடி ரூபாயையும், பென்சன் நிதியையும் பங்குச் சந்தையில் வைத்துச் சூதாடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இப்படி போதும் போதுமென்னும் அளவுக்கு முதலீட்டுக்கான பணம் தளும்பி வழிந்தும் பங்குதாரர்களைக் கொள்ளையடிக்கும் அம்பானியிசம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அதனைப் புதிய எல்லைக்கு வளர்த்திருக்கிறார்கள் அவரது புத்திரர்கள்.
..
""ஒரு தபால் கார்டு விலையில் ஃபோன் பேசலாம் — திருபாய் அம்பானி கனவுத் திட்டம்'' என்ற பெயரில் பங்குச் சந்தையில் குதித்த ரிலையன்ஸ் இன்போகாம், ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் ஒன்று எனவும் பிரீமியம் மதிப்பு 49 ரூபாய் என 50 ரூபாயில் பங்குகளை வெளியிட்டது. இதற்கு 10 வருடங்களுக்கு ஈவுத் தொகையோ வட்டியோ கிடையாது என்ற நிபந்தனையும் உண்டு. பிரீமியம் எனப்படுவது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் போலி மதிப்பு ஆகும். இந்தப் பங்குகள் வெளியீட்டில் முகேஷ் அம்பானியும், ரிலையன்சின் மேல்மட்ட அதிகார வர்க்கக் கும்பலும் தொழில் முனைவோர் என்ற பெயரில் பெருமளவு பங்குகளை தம் வசம் வைத்துக் கொண்டு 1 ரூபாய் விலையில் வாங்கிய பங்குகளை 50 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டினர். வாரிசுரிமைச் சண்டையின்போது அனில் அம்பானி கும்பல் இதை அம்பலப்படுத்தியது. அவலையும் உமியையும் கலந்து விற்கும் இந்தக் கலவையைத் திறமை என்று போற்றுவதா, மோசடி என்று குற்றம் சாட்டுவதா?
..
"அம்பானி ஒரு வெற்றிக் கதை' என்ற புத்தகத்தை எழுதிய என்.சொக்கனது கண்ணோட்டப்படி ""இது நடுத்தர வர்க்கப் பங்குதாரர்க ளின் அசட்டுத்தனத்துக்குக் கிடைத்த தண்டனை.'' கிழக்குப் பதிப்பகம் பெருமையுடன் வழங்கியுள்ள இந்தப் புத்தகம் பல்லாயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறதாம்.
..
அதில் அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.
..
இந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், ""ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்'' என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.
..
குரு திரைப்படம் தமிழகத்தில் வெற்றி பெறவில்லையென்றாலும் அது கூறவரும் செய்தி சமூகத்தில் செல்வாக்கு பெற்று வருகிறது. சுயநலன் என்பது ஒரு இழிந்த குணமாக கருத்தளவிலாவது பார்க்கப்படுவது, பொதுநலன் என்பது உயர்ந்த பண்பாக வாயளவிலாவது போற்றப்படுவது என்ற நிலை மாறி, பொதுநலன் பேசுவோர் ஏமாளிகளாகவும், சுயநலவெறி முன்னுதாரணமாகவும் சித்தரிக்கப்படும் காலத்தில் அத்தகையதொரு கயவனை நாயகனாகச் சித்தரிக்கிறது குரு. ரவுடிகள் நாயகர்களாக்கப்படுவதைக் காட்டிலும் இது அபாயகரமானது.
..
ஏமாற்றுவதையும், சக மனிதர்களை மோசடி செய்வதையும், சமூகத்தை ஊழல்படுத்துவதையும் எவ்விதக் கூச்சமும் இன்றிச் செய்த ஒரு மனிதனை இலட்சியவாதியாகக் காட்டுகிறார் மணிரத்தினம். அம்பானியின் குற்றங்களை திரையில் அடக்கி வாசித்துக் காட்டுவதன் மூலம் அவன் கூறும் விழுமியங்களுக்கு வலுச்சேர்க்கிறார். அம்பானியின் கிரிமினல் குற்றங்கள் கூட தெரிந்து செய்தவையோ, வேண்டுமென்றே செய்தவையோ அல்ல என்பது போலவும், ஒரு இலட்சியத்தைத் துரத்திச் செல்லும் மனிதனை ஒரு கட்டத்துக்கு மேல் அந்த இலட்சியமே இழுத்துச் செல்வது போலவும், அதற்கு அந்த மனிதனைக் குற்றம் சாட்ட முடியாது என்பதாகவும் சித்தரிக்கிறார் மணிரத்தினம்.

சினிமாவில் மணிரத்தினம் சித்தரிக்கும் சென்டிமென்டுகள் உள்ளிட்ட குணாதிசயங்கள் அம்பானியைப் போன்ற முதலாளிகளிடம் அறவே இருப்பதில்லை. ஊனமுற்ற பெண்ணிடம் பாசம் வைக்கும் அம்பானி, கோயங்காவின் காரை உடைத்ததற்காக தன் மானேஜரைக் கண்டிக்கும் அம்பானி போன்ற காட்சிகள் ஒரு கிரிமினலுக்கு மனித முகம் தருவதற்காகவே உருவாக்கப்பட்ட காட்சிகள். சினிமா ரவுடிகளைப் பார்த்து ஸ்டைல்களைக் கற்றுக் கொண்ட நிஜ ரவுடிகள் போல சினிமா அம்பானிகளைப் பார்த்து நிஜ அம்பானிகளும் இனி வேடம் போடக்கூடும்.

குரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அம்பானியின் மனைவியும், மகன்களும் பாராட்டு தெரிவித்தார்களாம். பின்னே, இறுதிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்களின் மத்தியில் குரு ""நமது சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவோம்'' என்று சூளுரைப்பானே, அம்பானிகளை அந்தக் காட்சி வானத்தில் பறப்பது போலப் பரவசமடைய வைத்திருக்கும். பால்தாக்கரே பாராட்டிய பம்பாய்! அம்பானிகள் பாராட்டிய குரு! த.மு.எ.ச. விருதுதான் பாக்கி. அவர்களை முந்திக் கொண்டு சுஜாதா மிகப் பெரிய விருது கொடுத்துவிட்டார். குரு திரைப்படம் இந்தியத் திரையுலகை ஹாலிவுட் தரத்திற்குக் கொண்டு சென்று விட்டதாம். அப்புறம் என்ன? புஷ், என்ரான் போன்ற அமெரிக்க வில்லன்களை நாயகர்களாகச் சித்தரிக்கும் திரைக்கதைகளை சுஜாதா எழுதிக் கொடுக்க மணி இயக்கலாமே!

ஒரு கொசுறுச் செய்தி: குரு திரைப்படத்தின் தயாரிப்பில் அனில் அம்பானியின் அட்லாப் என்ற நிறுவனமும் இருக்கிறது. அதாவது இது (குரு) அம்பானி கம்பெனியின் விளம்பரப்படம். விளம்பரப் படத்தைப் போட்டுக் காட்டுவதற்கு இரசிகர்களிடம் காசு வசூலிக்கப்பட்டதாக எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் அம்பானி. செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!
..
· வேல்ராசன்

"அழகி" அற்ப மனிதனின் அவலம் !

"சண்முகம் ஒன்றும் புரட்சிக்காரனல்ல; உங்களையும் என்னையும் போன்று குறைகளும் பலவீனங்களும் கொண்ட ஒரு நல்ல மனிதன் - அவ்வளவுதான்" என்று ரசிக சண்முகங்கள் வாதிடலாம். "சண்முகம் ஏன் சராசரி மனிதனாகச் சித்தரிக்கப்பட்டுயிருக்கின்றான்" என்பதல்ல நம் கேள்வி. "இந்த சராசரி மனிதனின் அற்பத்தனங்கள் இடிந்துரைக்கப் படாமல் அனுதாபத்துடன் சித்தரிக்கப்படுவது ஏன்" என்பதுதான் கேள்வி.
..
அந்தக் கலக்கமும் , வேதனையும் ஒரு மனிதனின் தவறுகளையும், தடுமாற்றங்களையும் அவனையே உணரச் செய்து, இதயத்தைத் தூய்மைப்படுத்தும் துன்பல்ல. மாறாக அந்தத் தவறுகளையே தான் செய்த தியாகமாகக் கருதுவது, அவனது இதயத்தை மேலும் கறைப்படுத்திக் காரியவாத வாழ்க்கையில் பீடு நடை போட வைப்பதெல்லாம் எப்படி நியாயமாகும்? இது ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கின்ற போராட்டத்தில் சுயநலனையே முன்னிறுத்துகிறது. இத்தகைய மனிதர்கள் தான் லஞ்சம் வாங்குவதும், லஞ்சம் கொடுத்து மெடிக்கல் சீட் பெறுவது, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாற்றுவது, தெருப்பிரச்சினைக்கே வீட்டுக்கதவை சாத்துவது முதலான காரியங்களைக் குற்ற உணர்வின்றி நியாய உணர்வோடு செய்பவர்கள்.
..
எனவே சண்முகமும், அவனது கையறு நிலையின் அவ்லத்தை இதயத்தில் சுமந்த சண்முகங்களாகிய நாமும், இன்னமும் அப்பாவிகள் என்று கருதிக் கொண்டுருந்தால் குற்றவாளிகள் என்ற பட்டியலில் ஏதோ ஒரு முகாந்திரத்தில் சேருவதற்குக் காத்திருப்போம். "நாம் அப்பாவிகளல்ல, கடைந்தெடுத்த காரியவாதிகள்" என்று சுய விமர்சனம் செய்துக் கொள்ளும் நேர்மையிருந்தால் எந்தக் குற்றவாளிப் பட்டியலிலும் சேராமல் போராடுவோம்; வாசகர்கள் பரிசீலிக்கட்டும்.

Tuesday, December 18, 2007

பருத்தி வீரன் - பொறுக்கித்தனத்தின் இரசனையா யதார்த்தத்தின் ருசி?பருத்திவீரனை பற்றி வித்தியாசமான படம், கிராமத்து மணம் வீசும் படம் என இரசிகர்கள் மத்தியில் பேசுப்படுகின்ற படம். ஆனால் இந்த படத்தில் ஒரு இரவுடியின் அற்ப வாழ்க்கையை இரசிக்கும்படி கொடுத்திருந்தாலும் அதில் செயற்கைத்தனங்களயும், கிராமத்து மக்களை எப்படி இழிவுப்படுத்துகிறது என எடுத்துரைக்கிறது, புதிய கலாச்சாரம் பத்திரிக்கையில் வெளியான பருத்தி வீரன் விமர்சனம். அவற்றில் இருந்து சில குறிப்புகள்.

..
வசூலில் வெற்றியடைந்திருக்கும் பருத்தி வீரனை மண்வாசனை கதை, அசலான பாத்திரங்கள், தெற்கத்தியப் பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டும் காட்சிகள் என எல்லா அம்சங்களிலும் போற்றும் இரசிகர்கள் திரைப்படத்தின் இறுதியில் வரும் கற்பழிப்புக் காட்சிகள் குறித்து மட்டும் வருத்தப்படுகிறார்கள்.
..
சென்டிமென்டால் போட்டுத்தாக்கும் இந்த மலிவான உத்தியில் இரசிகர்களின் பிரச்சனையோ வேறு மாதிரி. முத்தழகு கூறுவது போல் அவர்கள் பருத்திவீரனின் முன்வினை அவளைச் சுட்டது என்று கருதவில்லை. மாறாக, ஒரு காதல் ஜோடி சேர முடியாமல் இரக்கமின்றிப் பிரிக்கப்பட்டதே அவர்களின் கவலை.
..
சித்தப்பா செவ்வாழையுடன் பருத்தி வீரன் செய்யும் குடி, கூத்து, ஆட்டம், பாட்டத்தை அவர்கள் பாவமாக கருதவில்லை. சொல்லப்போனால் பார்வையாளர்கள், குறிப்பாக ஆண்கள் அந்த கேளிக்கைகளில் மனதளவில் கலந்து கொள்கிறார்கள்.
..
காட்சிக்கு ஒரு நகைச்சுவை என செதுக்கித் தீட்டப்பட்ட திரைக்கதை பொதுவாக கலகலப்பாக செல்கிறது. பருத்திவீரனது வக்கிரங்கள் எவையும் பொது புத்திக்கு அதிர்ச்சி தராததோடு அவற்றை இரசிக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளது.
...
ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகப் பிழைக்க முயலும் டக்ளசை இருவரும் ஏமாற்றுகிறார்கள், பணம் பறிக்கிறார்கள். இதிலும் ஒரு கிராமத்து அப்பாவியை ஏமாற்றுவதாக இரசிகர்கள் உணர்வதில்லை. கவுண்டமமணி பாணியிலான இந்த காமெடி பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்கான அரதப் பழசான உத்தி. நிஜ வாழ்வில் இப்படி அரட்டி மிரட்டி ஏமாற்றிப் பிழைக்கும் பேர்வழிகளை மக்கள் வெறுக்கிறார்கள். யதார்த்ததிற்காக போற்றப்படும் இந்தப் படத்தின் இலட்சணம் இது தான்..
..
இப்படி எல்லா சினிமாத்தனங்களும் செயற்கையான பாத்திரப் படைப்பும் கொண்டு நகைச்சுவையின் உதவியுடன் நேர்த்தியாகப் பின்னப்பட்ட சராசரி மசாலாதான் பருத்திவீரன்…
….
இந்த யதார்த்தம் போலியானது. படத்தில் வழக்கு மொழி,உடலசைவு காட்சிகளன்கள், நாட்டுப்புறக் கலைகளில் மண்வாசனை அடித்தாலும், கதையில், உண்மையான கிராமம் இல்லை. உண்மயான கிராமம் இங்கே கேலி செய்யப்படுகிறது. தேவர் சாதியினர் ஆதிக்கம் செய்யும் கிராமத்தில் குறத்து பெண்ணொருத்தி சாராயம் காய்ச்சி ராச்சியம் செய்கிறாள். தொழில் போட்டிக்கு வரும் ஆதிக்கசாதி நபர்களை தன்னந்தனியாய் நின்று கொலை செய்கிறாள். இத்தகைய கிராமத்தை எங்காவது கேள்விப்பட்ட்ருக்கிறீர்களா?..
....
பருத்திவிரனைப் போன்ற இரவுடிகள், பணக்காரர்கள், பண்ணையார்களுக்கு எடுபிடி சேவகம் செய்து பிழைப்பார்கள். அடிமைகளுக்கு சுயேச்சையான, கலகலப்பான வாழ்வு இருக்க முடியுமா என்ன? பருத்திவீரன் உள்ளூரில் மட்டும் சண்டித்தனம் செய்வதால் ஊர் சுற்றி வம்பலப்பதற்கு நேரம் இருக்கிறது. அவன் விரும்பியபடி சென்னை ஜெயிலுக்கு போகுமளவுக்கு பெரிய ரவுடியாக இருந்தால்....போலீசு போடுமா, எதிரி போடுவானா என அச்சத்தில் வாழ வேண்டியிருக்கும்.
...
வேலை வெட்டிக்கு போகாமல் பெண்களின் காசில் குடித்து விட்டு ஊர் சுற்றும் கிராமப்புறத்தின் எச்சங்கள் தான் பருத்திவீரன் போன்ற அழுக்குகள். இந்த அழுக்கையே அலங்காரமாய், அழகாய், கலகலப்பாக காட்டுகிறார் இயக்குநர். இதை எவ்விதச் சுரணையுமின்றி இரசிக்கும் இரசணை தான் நமக்கு நெருடலைத் தருகிறது.
..
இந்த பொறுக்கிவீரன் தங்களை கேலி செய்வதாக சாதாரண உழைப்பாளி மக்கள் முதல் படிப்பாளி இரசிகர்கள் வரை யாருமே உணர்வது இல்லை.
ஒரு திரைப்படத்தின் நாயகன் விவசாயியாகவோ, தொழிளாலியாகவோ தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவன் நிலப்பிரபுவாகவோ, காமவெறி பிடித்த மிருகமாகவோ கூட இருக்கலாம். அவன் வாழ்க்கையை எப்படி பார்க்க பழக்குகிறார் என்பது தான் பிரச்சனை. ஒரு சொறி நாயின் அழகை இரசிக்க கற்று கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

..
நன்றி - புதிய கலாச்சாரம் மே 2007

..
நன்றி: சுனா பானா